கடையநல்லூர் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து

சென்னை: ‘‘குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்படும்’’ என்று கடையநல்லூரில் நடந்த பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தென்காசியில் நேற்று முன்தினம் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ேநற்று 2-வது நாளாக கடையநல்லூர் பள்ளிவாசல் முன்பு திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தபோது பேசியதாவது:-தமிழகத்தில், ஹஜ் பயணிகளுக்கு வழங்கிய 6 கோடியை மத்திய அரசு நிறுத்தியது. அதை தமிழக அரசு 10 கோடியாக உயர்த்தி வழங்கியது. 2018ம் ஆண்டு முதல் 8,166 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஹஜ் பயணம் செல்பவர்கள் தங்குவதற்காக சென்னையில் 15 கோடியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள், தர்காக்கள் புனரமைக்க 3 கோடி தொகுப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. உலமாக்கள் ஓய்வூதியம் 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க ₹25 ஆயிரம் அல்லது 50 சதவீதம் இரண்டில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தபோது நாடு முழுவதும் அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்தன. அப்போது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் பொதுமக்களுக்கு, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்குகள், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்குகள் போன்றவற்றை தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் மீது பதிந்துள்ள  வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது.  

இவ்வாறு அவர் பேசினார். அதிமுக அரசு உதவியது: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நடந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட உதவியதோடு, அதற்கு உறுதுணையாகவும் நின்றது அதிமுக அரசு. அதற்கான மசோதா விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது’’ என குறிப்பிட்டார்.

Related Stories: