திமுகவினர் ஆளுநரிடம் நேரில் அளித்தனர் 5 அமைச்சர்கள், எம்எல்ஏ மீது கோடிக்கணக்கில் ஊழல் புகார்: இதுவரை 12 அமைச்சர்கள், ஒரு எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 22ம் தேதி தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து 7 அமைச்சர்கள் மீது கொடுத்த முதல்கட்ட ஊழல் புகார் பட்டியலை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்ட 2வது கட்ட ஊழல் புகார் பட்டியலை நேற்று மாலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஆளுநரிடம் அளித்தனர். அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்த பின்னர் துரைமுருகன் அளித்த பேட்டி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர், உள்ளிட்ட 8 அமைச்சர்களின் முதல் ஊழல் பட்டியலை கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி ஆளுநரிடம் நேரில் அளித்தார். அது குறித்து இதுவரை பரிகாரம் காணவில்லை. அதைத் தொடர்ந்து இப்போது 5 அமைச்சர்கள், ஒரு எம்எல்ஏ மீது என மொத்தம்  9 பேரின் மீது ஆதாரத்துடன் கூடிய புகார்களை  கவர்னரிடம்  அளித்துள்ளோம். கடந்த முறை புகார் மனு கொடுத்ததையும் சொன்னோம். அதை நான் படித்து கொண்டு இருக்கிறேன் என்று சொன்னார். இதையும் படிக்க்கிறேன் என்றார். படித்த பிறகு அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, எனக்கு இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று ஆளுநர் சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே, ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த பட்டியலை உள்துறைக்கு அனுப்பியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 3வது பட்டியல் வழங்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால் அப்போது இந்த அதிமுக அரசாங்கம் இருக்காது. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் கவர்னருக்கு மட்டும் தான் உண்டு. எங்கள் புகார் மனுவை தூசி படியாமல் ஆக்கப்பூர்வமாக மத்திய உள்துறை அமைசசருக்கு அனுப்பியிருக்கிறார். அதனை மத்திய அமைச்சர் வைத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். ஆளுநரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பணம் நிறைய இடத்தில் பினாமி பெயரில் முதலீடு செய்துள்ளார். முதல்வர் பழனிச்சாமியின் சகோதரி மகன் வெற்றிவேல், முதல்வர் மகனின் சகளை என்.ஆர்.சூரியகாந்த் பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளார். இந்த சொத்துக்களின் மீது விசாரணை நடத்த வேண்டும். அவரது பினாமிகள் விலை நிலங்களை அரசு நிர்ணயித்த விலையை விட குறைந்த விலைக்கு வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலங்களை வணிக ரிதியில் பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கான உரிய அனுமதியை சம்பந்தப்பட்ட துறையிடம் வாங்கவில்லை. விலை நிலங்களுக்காக போடப்பட்ட விதிமுறைகளை எடப்பாடி பழனிச்சாமியும், அவரது உறவினர்களும் மீறியுள்ளனர். இந்த சொத்தின் மதிப்பு பல ேகாடி ரூபாய் இருக்கும். மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு முறையற்ற முறையில் பினாமி பெயரில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார். இது அவர் சார்ந்திருக்கின்ற பதவிக்கு எதிரானது. தமிழக காவல்துறையில் 300க்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணனின் துறையை சேர்ந்த அதிகாரி பாண்டியன் என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 8.87 கோடி பணம், தங்கம், வெள்ளி, வைர நகைகளை கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரத்தில் அமைச்சரையும் விசாரிக்க வேண்டும். சூரிய மின்சாரம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பி.தங்கமணி மீது விசாரணை நடத்த வேண்டும். சிஏஜி அறிக்கையில் 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2021ல் பிப்ரவரி 8ம் தேதி 20 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதில் டெண்டர் விடப்பட்டது. திட்டமதிப்பீடு 1330 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.எஸ்.டி. மதிப்பில் குறைவாக தெரிகிறது. இதற்கான டெண்டரில் ெவளிப்படையான தன்மை இல்லை. ெடண்டருக்கான விதிமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மீறியுள்ளது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிராம பஞ்சாயத்துக்களுக்கு மிதிவண்டி வாங்குவதற்கான டெண்டரில் துறைசார்ந்த அதிகாரிகளும், அமைச்சர்களும் முறைகேடு செய்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஊழல் நடந்துள்ளதாக தெரியவருகிறது. 15 மாவட்டங்களில் அடங்கிய பல்வேறு பஞ்சாயத்துக்களுக்கு மிதிவண்டி வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 முதல் 2020ம் ஆண்டு விலை வந்து ஒரு மிதி வண்டி 15 ஆயிரத்தில் இருந்து 19,500 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களுக்கு வாங்குவதற்காக கூறப்பட்டுள்ளது. தள்ளுவண்டியின் விலையை ₹13 ஆயிரம் தான். ஆனால் 6 ஆயிரம் கூடுதலாக சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. டம்மி பில் போட்டு முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது.பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 சட்ட மன்ற தேர்தலில் பிரமாண பத்திரம் தாக்கல் செயதபோது தான் வருமான வரி கட்டும் நபர் இல்லை எனவும், தன்னிடம் பான் கார்டு கூட இல்லை எனவும் தெரிவித்து இருந்தார். ஆனால் 2011 ம் ஆண்டு தகவல் மற்றும் சிறப்பு திட்டங்களுக்கான அமைச்சராக பதவி ஏற்றபின்பு, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பல கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கியதாக புகார்கள் எழுந்தது. குறிப்பாக ராஜபாளையத்தில் 6 கோடி மதிப்பிலான 35 ஏக்கர் நிலத்தை ரூ 74 லட்சத்திற்கும், திருத்தங்கலில் 1 கோடி மதிப்பிலான 2 வீடுகளை 4.23 லட்சத்திற்கு வாங்கியதாக ராஜா மற்றும் மகேந்திரன் ஆகியோர் புகார் செய்தனர். மேலும் 2011-13 காலகட்டத்தில் சுமார் 7 கோடி அளவில் வருமானம் ஈட்டியதாக  புகார் எழுந்தது.

அந்தியூர் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தனது மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் ₹100 கோடி அளவுக்கு சொத்துக்களை சேர்த்துள்ளார். ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தின்படியும், சட்டத்தின்படியும், ஜனநாயகத்தை நிலைநாட்ட இவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் புகார்களை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 அமைச்சர்கள் மீது கவர்னரிடம் ஊழல் புகார் பட்டியல் கொடுக்கப்பட்டது. தற்போது மேலும் 5 அமைச்சர்கள் ஒரு எம்எல்ஏ மீது ஊழல் புகார் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: