வறட்சி மிகுந்த பகுதிகளுக்கு கழிவுநீரை கொண்டுவந்து சேர்க்க முதல்வர் ஆர்வம்-அமைச்சர் பாஸ்கரன் பேச்சால் அதிமுகவினர் ‘ஷாக்’

காரைக்குடி :சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. டிஆர்ஓ லதா வரவேற்றார். கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், ‘‘தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். காவிரி -  குண்டாறு திட்டம் வரும் 21ம் தேதி புதுக்கோட்டையில் துவங்கப்பட உள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைத்துள்ளார். எனவே இந்த அரசை மறக்கக்கூடாது. அரசுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்’’ என்று மக்களை பார்த்து கட்டளையிடுவது போல் பேசினார்.

நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் பாஸ்கரனிடம் செய்தியாளர்கள், ‘‘திமுக ஆட்சியில்தான் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதை சரியாக செயல்படுத்தாமல் தற்போது புதியதாக இத்திட்டத்தை கொண்டு வந்தது போல முதல்வர் துவக்கி வைத்துள்ளாரே’’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர், ‘‘காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் நீண்டநாட்கள் சர்வே செய்து சரியாக எந்த பிரச்னையும் இல்லாமல் கொண்டு வர ஆர்வமாக இருந்தார்.  பின்தங்கிய, வறட்சி மிகுந்த பகுதிகளுக்கு கழிவுநீரை, வேஸ்டாக போகும் நீரை கொண்டு வந்து சேர்க்க ஆர்வமாக இருந்தார். இது முத்தான திட்டம்’’ என்றார்.

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உபரிநீரை கொண்டு வர முதல்வர் ஆர்வமாக இருந்தார் என கூறாமல், கழிவுநீரை கொண்டுவர ஆர்வமாக இருந்தார் என உளறியதால் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.

தண்ணீர் கூட தராமல் மக்கள் அடைத்து வைப்பு

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு ெதாடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பயனாளிகள் காலை 8 மணிக்கே  வரவேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் 12 மணிக்கே வந்தார். இதனால் பயனாளிகள் 4 மணிநேரம் நிகழ்ச்சி நடந்த அரங்கில் அடைத்து  வைக்கப்பட்டனர். குடிக்க தண்ணீர் கூட வழங்காததால் மக்கள் அதிருப்தியடைந்தனர். மேலும், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை மாற்றி, மாற்றி  கொடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. கொத்தமங்கலத்தை சேர்ந்த  செல்லன் என்பவருக்கு அவரது பெயரில்  பட்டா வழங்காமல்,  பல வருடங்களுக்கு  முன் இறந்துபோன அவரது தந்தை கருப்பையா பெயருக்கு பட்டா வழங்கப்பட்டதால்  குளறுபடி ஏற்பட்டது.

Related Stories: