புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏக்கள் கட்சி சார்பில் பேரவைக்கு வந்தால் தகுதி நீக்கம் செய்ய வழிவகை உள்ளது...அரசு கொறடா அனந்தராமன்

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 நியமன பாஜக எம்.எல்.ஏக்கள் என கூற முகாந்திரம் இல்லை என அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி, 15 எம்எல்ஏக்களுடன், திமுக 3 மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினர் ஆதரவுடன் நடந்து வந்தது. இந்நிலையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

மேலும் எம்எல்ஏ தனவேல் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆக குறைந்தது. எதிர்க்கட்சி வரிசையில் என்ஆர் காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜ நியமன எம்எல்ஏக்கள் 3 என 14 பேர் உள்ளனர். எனவே நாராயணசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் மனுவை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் அதிமுக, பாஜ எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு கவர்னர் செயலரிடம் கடந்த 16ம் தேதி வழங்கினர். இந்த நிலையில் நேற்று முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு வரும் 22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டு இருந்தார்.

முன்னதாக கடந்த 2016-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, நியமன எம்எல்ஏக்கள் பெயரை பரிந்துரை செய்யாமல் நாராயணசாமி காலதாமதப்படுத்தினார். இதனை பயன்படுத்தி 3 நியமன எம்எல்ஏக்களாக பாஜவை சேர்ந்தவர்களை மத்திய அரசு நியமித்தது. இவர்கள், புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 22ம் தேதி வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது 3 நியமன பாஜக எம்.எல்.ஏக்கள் என கூற முகாந்திரம் இல்லை என அரசு கொறடா அனந்தராமன் கூறியுள்ளார். கட்சி சார்பில் பேரவைக்கு வந்தால் தகுதி நீக்கம் செய்ய வழிவகை உள்ளது. மேலும் சட்டரீதியாக 3 பேரும் கட்சி சார்பில் அங்கீகரிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இல்லை என அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: