திரிணாமுல்லில் இருந்து விலகி வேறொரு கட்சியில் சேர மறுத்ததால் அமைச்சர் மீது குண்டுவீச்சு: மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: ‘திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, தனது கட்சியில் சேரும்படி ஒரு கட்சி மிரட்டியதற்கு பணியாத காரணத்தில்தான், அமைச்சர் ஜாகிர் உசைன் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறு்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களை பாஜ இழுத்து வருகிறது. பல திரிணாமுல் எம்பி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய தலைவர்கள் பாஜ.வுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாகீர் உசைன் தனது ஆதரவாளர்களுடன் காத்திருந்தார். அப்போது அவர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அவர் உட்பட பலர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு நேற்று வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, ஜாகீரிடம் நலம் விசாரித்தார்.

பின்னர், மம்தா அளித்த பேட்டியில், ‘‘முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அமைச்சர் ஜாகீர் உசைன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வேறு கட்சியை சேர்ந்த சிலர் அவரை தங்களின் கட்சியில் சேரும்படி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். ரயில் நிலையத்தில் இதுபோன்ற தாக்குதல் எப்படி நடத்த முடியும்? 26 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து சிஐடி மட்டுமின்றி, சிறப்பு படை போலீசாரும் விசாரணை நடத்துவது அவசியமாகும்,” என்றார். பாஜ.,தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்பதையே மம்தா மறைமுகமாக கூறியுள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories: