காதலுக்காக குடும்பத்தினர் 7 பேர் படுகொலை சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பெண்ணுக்கு தயாராகும் தூக்கு மேடை: மதுரா சிறையில் ஏற்பாடுகள் தீவிரம்

மதுரா: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்தவர் ஷப்னம் அலி. 2 எம்ஏ பட்டங்களை பெற்றவர். 6ம் வகுப்பை தாண்டாத சலீம் என்பவரை இவர் காதலித்தார். அவரையே திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்பினார். இதற்கு ஷப்னத்தின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. காதல் பித்து தலைக்கேறிய ஷப்னம், குடும்பத்தினர் எல்லோரையும் கொல்ல திட்டமிட்டார். கடந்த 2008ம் ஆண்டில் தனது தாய், தந்தை, 2 சகோதரர்கள், சகோதரரின் மனைவி, உறவுக்கார வாலிபர் மற்றும் 10 மாத கைக்குழந்தை ஆகிய 7 பேருக்கும் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். எல்லோரும் மயங்கியதும், அவர்களின் கழுத்தை ஈவுஇரக்கமின்றி அறுத்துக் கொன்றார்.

குலை நடுங்க வைத்த இந்த கொலை வழக்கில் ஷப்னம் அலிக்கும், காதலன் சலீமுக்கும் அம்ரோகா நீதிமன்றம் 2010ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. ஆனால், தண்டனையில் இருந்து தப்பிக்க, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அனைத்திலும் வழக்கு தொடர்ந்து தோற்றார். ஜனாதிபதியிடம் விண்ணப்பிக்கப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஷப்னம் அலியை தூக்கிலிட மதுரா சிறை நிர்வாகம் தயாராகி வருகிறது. ஆனால், ஷப்னத்தின் வழக்கறிஞர், ‘முறைப்படி தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆணை எங்களுக்கு வழங்கப்படவில்லை. ’ என்று கூறியுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரையில் ஏராளமான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் பெண்கள் யாரும் தூக்கில் போடப்பட்டது கிடையாது. ஷப்னத்தை தூக்கில் போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், சுதந்திர இந்தியாவில் பெண்ணுக்கு நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை இதுவாகத்தான் இருக்கும்.

Related Stories: