கலசப்பாக்கம் அருகே செய்யாற்றில் இன்று அண்ணாமலையார் தீர்த்தவாரி : ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே செய்யாற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் மாசி  மாதம் ரத சப்தமியை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி நடப்பது வழக்கம். அதன்படி இன்று காலை செய்யாற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி திருவண்ணாமலையில் இருந்து இன்று காலை புறப்பட்ட உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், வரும் வழியில் கலசப்பாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை வலம் வந்தார். தொடர்ந்து கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு ஊராட்சி மதுரா மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது ஏராளமானோர் திரண்டு தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்யாற்றை வந்தடைந்த கலசப்பாக்கம் திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரரும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும் நேருக்கு நேர் சந்தித்து சங்கமித்தனர். இதைடுத்து முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நடந்தது. இதற்காக செய்யாற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு, அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மெகா பந்தலில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், திரிபுரசுசந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தீர்த்தவாரி முடிந்த பின்னர் நாளை அண்ணாமலையார் மீண்டும் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு செல்வார்.

Related Stories: