வீடு கட்டுவதற்காக இரும்பு பெட்டியில் ஏழை குடும்பம் குருவி போல் சேர்த்த ரூ.5 லட்சத்தை கரையான் அழித்தது

திருமலை: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மைலவரத்தை சேர்ந்தவர் ஜமாலியா. இவர் பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். அதன்மூலம் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தார். மேலும், வாடகை வீட்டில் வசிக்கும் இவர், பன்றி வளர்ப்பில் கிடைத்த வருமானத்தில் வீடு கட்டுவதற்காக குருவி போல் சிறிது சிறிதாக பணம் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில், வங்கியில் கணக்கு தொடங்கி பணம் சேமிக்க தெரியாததால், வீட்டிலேயே இரும்பு பெட்டியில் பணத்தை சேமித்து வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பணம் வைத்திருந்த இரும்பு பெட்டியை திறந்து பார்க்காமல் இருந்துள்ளார்ர். நேற்று முன்தினம் இரும்பு பெட்டியை ஜமாலியா திறந்து பார்த்துள்ளார். அப்போது, அதில் ரூ.10, ரூ.20, ரூ.100 நோட்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் ரூ.5 லட்சத்தை கரையான்கள் அரித்து விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஆசை ஆசையாய் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த பணம் முழுவதையும் கரையான் அரித்துவிட்டதால் குடும்பத்தினர் வேதனை அடைந்தனர். மேலும் கரையான் அரித்த ரூபாய் நோட்டுகள் இருந்த இரும்பு பெட்டியை திறந்து வைத்து அந்த ஏழை குடும்பத்தினர் குழந்தைகளுடன் கதறி அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அந்த ஏழை குடும்பத்தாரின் வீடு கட்டும் கனவை கரையான் அரித்து விட்டது. ஆனால், ஆந்திர அரசு இந்த ஏழை குடுபத்தின் கனவை நிறைவேற்ற வீடு கட்டி தர வேண்டும்”என்றனர்.

Related Stories: