மதுரையில் சிலை திறப்பு விழா கலைஞரின் கனவுகளை நனவாக்க உறுதியேற்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இன்னும் 3 மாதத்தில் கலைஞரின் கனவை நனவாக்க அவரது  சிலைக்கு கீழே நின்று இப்போது உறுதிமொழி எடுத்துக் கொள்வோம் என்று மதுரையில் கலைஞர் சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசினார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு மதுரை, சிம்மக்கல்லில் 12 அடி உயர பீடத்தில், 8.5 அடி உயர முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:தந்தையின் சிலையை மகனான நான் திறந்து வைத்துள்ளேன். இந்த சிலை அமைக்க பல இடையூறு, தடைகள் இருந்தன. அத்தனை இடையூறுகளையும் கடந்து, சிலை திறக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

முடியும் என்ற நிலையில், கலைஞர் நினைவிடம் அமைக்க எப்படி சட்ட போராட்டம் நடத்தினோமோ, அதேபோல்,  சட்ட போராட்டம் நடத்தி மதுரையில் தற்போது சிலை திறக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் சிலை முதன்முதலாக அண்ணா அறிவாலாயத்திலும், இரண்டாவதாக அவர் பிள்ளையாக கருதும் முரசொலி அலுவலகத்திலும், அவர் குருகுலமாக கருதும் ஈரோட்டிலும், அடுத்து அவர் எப்போதும் அண்ணா என உயிர் மூச்சாக முழக்கமிடும்  காஞ்சிபுரத்திலும் திறக்கப்பட்டுள்ளது. அவை எல்லாம் நமக்கு சொந்தமான தனியார் இடத்தில், எவ்வித அனுமதி பெறாமல் நிறுவியுள்ளோம். மதுரையில் பொது இடத்தில் நிறுவ முடியுமா என்றபோது, நீதிமன்றத்தில் நியாயம் கேட்போம் என முடிவு செய்தோம். நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைத்துள்ளது. இதற்காக போராடிய வீரா கதிரவன் தலைமையிலான வழக்கறிஞர் குழுவுக்கும், மதுரை மாநகர் நிர்வாகிகளான தளபதி, மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோருக்கும்  தலைமைக்கழகம் சார்பில்  நன்றியை தெரிவிக்கிறேன்.

சிலை நிறுவவேண்டும் என்றால், தீனதயாளனை கலைஞர் அழைத்து செய்யச் சொல்வார். அப்படி செய்யச் சொன்ன கலைஞருக்கு, சிற்பி தீனதயாளனே சிலை வடிவமைத்து கொடுத்துள்ளார். இது வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய விஷயம். பொறியாளர் மணிகண்டன், சிலை நிறுவ இரவு பகலாக இங்கிருந்து பணியாற்றிய எ.வ.வேலுவிற்கு நன்றியை தெரிவிக்கிறேன். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அண்ணாவின் கனவாக கலைஞரின் 5 தத்துவம் சிலையின் பீடத்தில் பதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாம் செயல்படுவோம். இன்னும் 3 மாதத்தில் கலைஞரின் கனவு நிறைவேறப்போகிறது. அவரது கனவை நனவாக்க அவரது சிலைக்கு கீழே நின்று உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை ஜப்பானில் உள்ளதா?

மதுரை ஒத்தக்கடையில் நேற்று மாலை ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ நிகழ்ச்சி நடந்தது. இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேரடியாக குறைகளை கேட்டறிந்து பேசியதாவது: மதுரை மாநகராட்சிக்கு ₹1,000 கோடி நிதி நுழைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொள்ளையடிக்க தேவையற்ற இடங்களில் பாலங்கள் கட்டப்படுகின்றன. ஸ்மார்ட் சிட்டி பெயரில் கொள்ளை நடக்கிறது. அதற்கு உடந்தையாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளனர். மதுரையை பலப்படுத்தியது திமுக. இப்படி திட்டங்களை ஏதாவது அதிமுகவால் சொல்ல முடியுமா? எய்ம்ஸ் மருத்துவமனை வந்து விடும் என்று நானும் நினைத்தேன். அடிக்கல் நாட்டப்பட்டு, 2 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

மருத்துவமனைக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 300 கோடி, 500 கோடி என ஒதுக்கிய நிலையில், தமிழகத்திற்கு ₹12 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. ஜப்பானில் இருந்து நிதி வரும் வரை இத்திட்டம் கிடப்பில் கிடக்கிறது என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. இக்கூட்டத்தின் வாயிலாக நான் கேட்பது, மதுரை ஜப்பானில் உள்ளதா, இந்தியாவில் உள்ளதா? இது வேதனைக்குரிய விஷயம்’’ என்றார்.

Related Stories: