எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர் சசிகலாவை விமர்சிப்பது நாகரிகமற்றது: கே.பி.முனுசாமி எம்பி பேட்டி

கிருஷ்ணகிரி: எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லாத சசிகலா பற்றி விமர்சிப்பது நாகரிகமல்ல என்று கே.பி.முனுசாமி எம்பி கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் குப்பச்சிப்பாறை, வீரோஜிப்பள்ளி ஆகிய இடங்களில் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான கே.பி. முனுசாமி பேட்டியளித்தார். சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதாவது: சசிகலா எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லாத ஒருவர். அவரைப்பற்றி தொடர்ந்து நாங்கள் விமர்சனம் செய்வது ஆரோக்கியமாக இருக்காது. எந்த வகையிலும் தொடர்பு இல்லாத ஒரு நபரை பற்றி மீண்டும், மீண்டும் பேசுவது நாகரிகமாக இருக்காது. நான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என சசிகலா எங்கும் கூறவில்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு கூறுகின்றன.

இதைப்பற்றி அதிகம் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவால் துரோகி என்ற அடையாளம் காணப்பட்டவர் டிடிவி தினகரன். அவர் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டு வருகிறார். ஆகவே, எந்த ரூபத்தில் வந்தாலும், அவர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாது என்றார். தொடர்ந்து, கூட்டணியில் பாஜவால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பில் சிக்கல் நிலவ வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, எங்கள் கூட்டணியில் யார் வருகிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுடைய கொள்கை வேறு, பாஜவின் கொள்கைகள் வேறு. அவர்கள் கூட்டணிக்காக எங்களுடன் இணைகிறார்கள் என்றார்.

Related Stories: