வேலூர் அடுத்த பெருமுகை பாலாற்றில் 7 ஆயிரம் வாத்து குஞ்சுகள் இறப்பு: பறவைக்காய்ச்சல் பாதிப்பா? அதிகாரிகள் ஆய்வு

வேலூர்: வேலூர் அடுத்த பெருமுகை பாலாற்றில் மேய்ப்பதற்காக சென்ற 7 ஆயிரம் வாத்துக்குஞ்சுகள் சுருண்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடி அடுத்த கரிகிரி சஞ்சீவிராயபுரத்தை சேர்ந்தவர் சுதாகரன். இவர் சமீபத்தில் வங்கியில் 7  லட்சம் கடன் வாங்கி வாத்து வளர்ப்புத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவர் மொத்தம் 7 ஆயிரம் வாத்துக்குஞ்சுகளை தினமும் தனது ஊரில் இருந்து கால்நடையாகவே வயல்வெளிகள், பாலாறு உட்பட பல இடங்களில் மேய்த்து வந்துள்ளார். நேற்று காலையும் வழக்கம்போல தனது ஊரில் இருந்து வாத்துக்குஞ்சுகளை மேய்த்துக் கொண்டு பெருமுகை பாலாற்றில் தேங்கியுள்ள மழைநீரில் விட்டுள்ளார். அவ்வாறு தண்ணீரில் விட்ட சிறிது நேரத்தில் வாத்துக்குஞ்சுகள் ஒவ்வொன்றாக சுருண்டு விழுந்து இறந்துள்ளன.

சுமார் அரை மணி நேரத்தில் 7 ஆயிரம் வாத்துக்குஞ்சுகளும் தன் கண்ணெதிரிலேயே சுருண்டு விழுந்ததை கண்ட சுதாகரன் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கிராம மக்கள் அங்கு சூழ்ந்தனர். தகவல் அறிந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும் அலுவலர்கள் விரைந்து வந்து வாத்துகள் மேய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படும் பாலாற்று குட்டை நீர், பாலாற்றங்கரையில் உள்ள நெற்பயிர் மாதிரிகள், வயல்வெளிகளில் தேங்கியிருந்த தண்ணீர் என மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சுதாகரனிடம் கேட்டபோது, ‘இந்த குஞ்சுகள் அனைத்தும் 38 நாள் குஞ்சுகள். ஒரு வாத்துக்குஞ்சு முழுமையான வளர்ச்சி பெற 100 நாட்களாகும். ஒரு குஞ்சு 100 என மொத்தம் 7 லட்சம் வங்கிக்கடன் பெற்று 7 ஆயிரம் குஞ்சுகளை வாங்கி வந்து வளர்த்து வந்தேன்.

இன்று என் கண்ணெதிரிலேயே எல்லா வாத்துக்குஞ்சுகளும் இறந்து போனது. இது எனக்கு பெரிய இழப்பாகும். அரசு ஏதாவது எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று வேதனையுடன் தெரிவித்தார். இதுகுறித்து கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘வாத்துக்களை கால்நடையாகவே மேய்த்து வரும்போது வயல்வெளிகளில் எலிகளுக்காக ஆர்கானிக் எலி பாய்சன் தெளிப்பார்கள். அதை கால்நடைகள் முகரும்போது இதுபோன்ற பிரச்னை வரும். வாத்துக்குஞ்சுகள் என்பதால் இறந்துள்ளன. இறப்புக்கு என்ன காரணம் என்பது முழுமையான ஆய்வுக்கு பிறகே தெரியும். சம்பவ இடத்துக்கு எங்கள் துறை அலுவலர்களை அனுப்பி வைக்கிறேன். ஆனால் நிச்சயம் இது பறவைக்காய்ச்சலாக இருக்காது’ என்றார். பெருமுகை பாலாற்றில் ஒரே சமயத்தில் 7 ஆயிரம் வாத்துக்குள் திடீரென சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: