1964ல் வீசிய கோர புயலின் சாட்சியாக நிற்கும் தனுஷ்கோடி தேவாலயம் இடிந்து விழும் அபாயம்: பாதுகாக்க சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் புயலின் நினைவாக நிற்கும் சேதமடைந்த தேவாலயத்தை பாதுகாக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். பாக் ஜலசந்தி கடலில் கடந்த 1964ல் வீசிய புயலால் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி நகரமே கடலில் மூழ்கியது. தனுஷ்கோடியில் இருந்த ரயில்நிலையம், அரசு அலுவலகங்கள், கப்பல் துறைமுகம், அரசு அலுவலகங்கள், கோயில்கள், தேவாலயம் மற்றும் வீடுகள் என அனைத்தும் சேதமடைந்தன. மக்கள் குடியிருந்த தெருக்கள் பலவும் கடலில் மூழ்கின. புயலின் கோரத்தை உணர்த்தும் வகையில் சேதமடைந்த கட்டிடங்கள் தற்போது வரை தனுஷ்கோடியில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கின்றன.

ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் தனுஷ்கோடிக்கும் செல்கின்றனர். அங்கு புயலின் சாட்சியாக நிற்கும் சேதமடைந்த அஞ்சல்நிலையம், ரயில்நிலையம், தேவாலயம் ஆகியவற்றை பார்த்து செல்கின்றனர். எஞ்சி நிற்கும் இந்த கட்டிடங்கள் தனுஷ்கோடியில் ஆண்டுதோறும் பெய்து வரும் மழை, புயல் காற்றினால் இடிந்து தரைமட்டமாகும் அபாயம் உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர்மழையால் சேதமடைந்த தேவாலயத்தின் ஒரு பகுதி சுவர் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி விட்டது. மற்ற பகுதிகளும் கடல் உப்புக்காற்றில் அரிப்பு ஏற்பட்டு வருவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதன் அருகில் யாரும் செல்லாத வகையில் மீனவர்கள் முட்செடிகளை வெட்டி போட்டு தடுப்புகள் ஏற்படுத்தியுள்ளனர். சேதமடைந்த கட்டிடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பழமை ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தனுஷ்கோடி என்றாலே சேதமடைந்த தேவாலயம், ரயில் நிலைய கட்டிடங்கள், அரிச்சல்முனை கடற்கரை உள்ளிட்டவைதான் நினைவுக்கு வரும். தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மறக்காமல் சேதமடைந்த தேவாலயம் முன்பு நின்று குரூப் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்று புயல் அழிவின் எச்சமாய் தற்போது வரை காட்சியளித்துக் கொண்டிருக்கும் தேவாலயம் முற்றிலும் இடிந்து தரைமட்டமாவதற்குள் பாதுகாக்கவும், பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

Related Stories: