காஸ் விலையை குறைக்க சொல்லாமல் மோடிக்கு எடப்பாடி, ஓபிஎஸ் ஜால்ரா அடிப்பதா? காங்கயத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

காங்கயம்:  திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூரில் திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் சிவசேனாபதி கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காங்கயம் கால்நடை திருவிழா நேற்று நடந்தது. கால்நடைத் திருவிழாவில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கயம் அருகே, ஈரோடு செல்லும் சாலையில் உள்ள முள்ளிப்புரத்தில் தனது வாகனத்தில் இருந்து இறங்கி, அங்கிருந்த  இரட்டைக் காளை  பூட்டிய மாட்டு வண்டியில் கண்காட்சிக்கு வந்தார். திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமை தாங்கினார். கால்நடை திருவிழாவில் பங்கேற்பதற்காக 500க்கும் மேற்பட்ட காங்கயம் இன காளைகளை அவற்றினை வளர்ப்பவர்கள் அழைத்து வந்திருந்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் காளைகளை பார்வையிட்ட பின் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் எப்படி மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்தார்களோ அதைவிட பெரிய வெற்றியை வரும் சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு கொடுக்க இருக்கிறார்கள்.

மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடியவர் ஸ்டாலின் மட்டும்தான். இங்குள்ள முதல்வரும், துணை முதல்வரும் யார் மிகச்சிறந்த அடிமை  என பார்க்கலாம் என்று போட்டி போட்டிக்கொண்டு ஜால்ரா அடிக்கின்றனர். வெற்றிநடை போடும் தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார்கள். காஸ் விலை, பெட்ரோல் விலையை குறைக்க வக்கில்லாமல் மோடி ஆட்சிக்கு ஜால்ரா அடித்து வருகின்றனர். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அமெரிக்காவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்

தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், பிரதமர் மோடி முதல்வர், துணை முதல்வர் கையை பிடித்தபடி போஸ் கொடுத்ததை நினைத்து பார்த்தேன். அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் கையை பிடித்துக் கொண்டு பிரதமர் மோடி இதேபோல்தான் நின்றார். தற்போது அமெரிக்க மக்கள் டிரம்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அதுபோலத்தான் தமிழகத்திலும் நடக்க போகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும், சட்டப்போராட்டம் நடத்தி நிச்சயம் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்.

Related Stories: