மனோஜ்பாண்டியன்-இசக்கிசுப்பையா மல்லுக்கட்டல் அம்பை தொகுதியில் அதிமுகவில் சீட் யாருக்கு?: `கானா’வும் கோதாவில் குதிப்பதால் சிக்கல்

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கோபாலசமுத்திரத்தில் ஆரம்பித்து பாபநாசம் வனப்பகுதியான காரையாறு வரை உள்ளது. இத்தொகுதி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நிறைந்த தொகுதி ஆகும்.   இத்தொகுதியில் சமீப காலமாக தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும், நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்தான் வெற்றி பெற்று வருகின்றனர். அதிமுக சார்பில் இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக பலர் போட்டி போடுகின்றனர்.

இத்தொகுதியில் தற்பொழுது எம்எல்ஏவாக இருந்து வருபவர் அதிமுக அமைப்பு செயலாளர் முருகையாபாண்டியன். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்துவிட்டார். இது அதிமுகவிற்கு பெரும்  பின்னடைவாக கருதப்படுகிறது. தற்போது களத்தில் இருப்பவர்களில் முன்னாள் இத்தொகுதி எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சருமான இசக்கிசுப்பையாவும் ஒருவர்.  அதிமுகவில் ஒரு கோஷ்டி இவரை எதிர்த்து வருகிறது.  இசக்கிசுப்பையாவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாக உள்ளார். இவர் ஏற்கனவே தினகரன் அணியில் சிறிது காலம் இருந்துவிட்டு அதிமுகவில் இணைந்தார்.

அடுத்து களத்தில் இருப்பவர் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இருந்துவரும் மனோஜ் பாண்டியன். இவருக்கு பிஎச்.பாண்டியனின் மகன் என்ற கூடுதல் தகுதியும் உண்டு. இவருக்கு ஆதரவாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளார்.  மனோஜ் பாண்டியன் முதலில்இருந்தே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையாவின் அதிமுகவிலுள்ள எதிர்கோஷ்டி அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமிபாண்டியனை இத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதற்காக  கருப்பசாமி பாண்டியனும் தயாராகி வருவதாகவே தெரிகிறது. கருப்பசாமி பாண்டியன் திமுகவில் சிலகாலம் இருந்துவிட்டு ஜெயலலிதா மறைவிற்கு சில மாதங்களுக்குமுன் தான் அதிமுகவில் சேர்ந்தார். அதிமுக உட்கட்சி பூசல்  இத்தொகுதியில் நீருபூத்த நெருப்பாக உள்ளது.

Related Stories: