கந்தர்வகோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டில் 540 காளைகள் சீறிப்பாய்ந்தன-39 பேர் படுகாயம்

கறம்பக்குடி : கந்தர்வகோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 540 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டி 39 பேர் படுகாயமடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கந்தர்வகோட்டை அருகே முரட்டு சோழகம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வருடம் தோறும் தை பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதே போல் நேற்று முரட்டு சோழகம்பட்டி கிராமத்தில் கிராமத்தார்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, சேலம், திண்டுக்கல் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து மொத்தம் 540 காளைகள் பங்கேற்றன. 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். போட்டியில் கலந்து கொண்டு பிடிபடாத காளைகளுக்கும் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசு, பீரோ, கட்டில், மின்விசிறி, நாற்காலிகள், சில்வர் அண்டா, குடம், ரொக்க பணம் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் விழா குழுவின் சார்பாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட 39 பேர் காயமடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த 3 பேர் தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை முரட்டு சோழகம்பட்டி கிராமத்தை சேர்ந்த விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 200 க்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories: