மாயவலையில் தமிழர்கள் சிக்கமாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இருந்து மீன், கருவாடு ஏற்றுமதிக்கு இலங்கையின் தடையால், சென்னையில் மட்டும் ரூ.500 கோடி மதிப்புள்ள 6 ஆயிரம்  டன் கருவாடு தேங்கிக் கிடக்கிறது. இது குறித்து பலமுறை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட பிறகும் இலங்கை அரசின் தடையை நீக்குகிற சூழல் ஏற்படவில்லை. அதேபோல, மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். கடந்த ஜனவரி இறுதியில் ராமநாதபுரத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று மீனவர்கள் கோரிக்கை எழுப்பினார்கள். பாஜ அரசு படுகொலைக்குக் காரணமான இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை. இதை விட மீனவர் விரோதப் போக்கு வேறு என்ன இருக்கமுடியும்? எனவே, இந்தியாவிலேயே பாஜ கால் ஊன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால் மகாகவி பாரதியார், ஔவையார் கவிதை வரிகளை கூறி, தமிழ் மக்களை ஏமாற்றி விடலாம் என்று பிரதமர் மோடி பகல் கனவு காணுகிறார். தமிழர்களுக்கு விரோதமாக பல்வேறு நடவடிக்கைளை எடுத்திருக்கிற பிரதமர் மோடி விரித்திருக்கிற மாயவலையில் மடியில் கனம் உள்ள காரணத்தால் அதிமுக-வினர் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சுயமரியாதையும், மானமும் உள்ள தமிழர்கள் ஒருபோதும் மோடியின் மாயவலையில் சிக்கமாட்டார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: