பெங்களூருவில் செயல்படும் நிதி நிறுவனத்தில் ரூ.4.75 கோடி மோசடி: சென்னையை சேர்ந்த இருவர் கைது

தண்டையார்பேட்டை: பெங்களூருவில் செயல்படும் நிதி நிறுவனத்தில் ரூ.4.75 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த இருவரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.4,75 கோடி மோசடி நடைபெற்றதாக, அதன் நிர்வாகிகள் பெங்களூரு காவல் துறையில் புகார் அளித்தனர். போலீசார் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தனர். சிபிஐ நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் தொடர்புடைய  இருவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், பெங்களூருவில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வந்த சிபிஐ அதிகாரிகள், தண்டையார்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முகமது அபுபக்கர் (32), ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவை சேர்ந்த முகமது ரபிக் (30) ஆகிய இருவரை கைது செய்து, நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரிக்க நேற்று பெங்களூரு அழைத்து சென்றனர்.

5 பேருக்கு குண்டாஸ்: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வாகன உரிமையாளர்களிடம் ஆன்லைன் மூலம் போலியாக வாகன காப்பீடு ஆவணங்கள் தயார் செய்து கொடுத்து பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட திருநெல்வேலியை சேர்ந்த மாரியப்பன் (39), ஆனந்த் (40), புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் கீரனூரை சேர்ந்த அன்சர் அலி (44), ஜெயின் அலாவுதீன் (40), புதுக்கோட்டை காமராஜபுரம் 18வது தெருவை சேர்ந்த செந்தில் குமார் (எ) இன்சூரன்ஸ் செந்தில் (47) உட்பட 5 பேரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: