அசாமில் பிரசாரம் தொடக்கம் குடியுரிமை சட்டத்தை அமலாக்க மாட்டோம்: ராகுல் காந்தி வாக்குறுதி

சிவசாகர்: அசாமில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘அசாமில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’ என வாக்குறுதி தந்துள்ளார். அசாமில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். சிவசாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: அசாம் ஒப்பந்தம் அமைதிக்காகவும், இம்மாநிலத்தை பாதுகாக்கவும் கொண்டு வரப்பட்டது. நானும் எனது கட்சியினரும் இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு கொள்கையையும் பாதுகாப்போம். பாஜ.வும், ஆர்எஸ்எஸ்.சும் அசாமை பிளவுபடுத்த முயற்சிக்கின்றன.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இங்கு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம். அசாமில் இம்மண்ணின் மைந்தன்தான் முதல்வராக வர வேண்டும். டிவியை ரிமோட் மூலம் இயக்கலாம், ஆனால், முதல்வர் அப்படி இருக்கக் கூடாது. இப்போதுள்ள பாஜ முதல்வர் நாக்பூல் இருந்தும் டெல்லியில் இருந்தும் வரும் உத்தரவுபடி நடக்கிறார். மீண்டும் இதே போன்ற ஒரு முதல்வர் கிடைத்தால் எந்த நன்மையும் இருக்காது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தரக்கூடிய முதல்வர்தான் இங்கு வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: