ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் நடக்கிறது கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதில் முறைகேடு: தனியார் கல்லூரி பேராசிரியர்கள் புகார்

சேலம்: தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 140க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் சுமார் 3 ஆயிரம் பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இதனிடையே மாநிலம் முழுவதும் உள்ள உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள், கவுரவ விரிவுரையாளர்களை கொண்டு நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவங்குகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யாமல், தன்னிச்சையாக நிரந்தரம் செய்வது, சட்டத்திற்கு முரணானது. பல்வேறு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் யாரும் முறையாக நியமனம் செய்யப்படவில்லை. முறையான கல்வித்தகுதியும், இடஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு, சிபாரிசின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களை அப்படியே நிரந்தரப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மாநிலம் முழுவதும் உரிய தகுதியுடன் 1,996 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களை பட்டியலெடுத்து, 497 பேர் நிரந்தரப்படுத்தப்படவுள்ளனர். இதற்காக ஒவ்வொருவரிடமும், ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் நடந்து வருகிறது. இதனால் தகுதியற்றவர்களை, எந்தவித இடஒதுக்கீடும் பின்பற்றாமல் நிரந்தரப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்துவதுடன், இடஒதுக்கீட்டை முறையாக கடைபிடித்து நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: