ஊழல் இல்லாத துறைகளே இல்லை எடப்பாடி ஆட்சியில் மாஸ்க் வாங்கியதிலும் ஊழல்: கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

பள்ளிபாளையம்:  எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஊழல் இல்லாத துறைகளே இல்லை.  என, பள்ளிபாளையத்தில் நேற்று கனிமொழி எம்பி பேசினார். விடியலை  நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சிக்காக, கனிமொழி எம்பி நேற்று காலை  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வந்தார். அங்கு. திறந்த வேனில்  நின்றபடி அவர் பேசியதாவது:  இந்த ஆட்சியில் எதுவும் தரமாக இல்லை.  நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிக்கொண்டிருக்கும் போதே இடிந்து  விழுகிறது. ரேஷன்  கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமாகவே இல்லை. ஆட்சியை  காப்பாற்றிக்கொள்ள, டெல்லி ஆட்சியாளர்களுக்கு அடிமையாகி, தமிழ் நாட்டையும்,  தமிழ் மொழியையும் இந்த அரசு அடகு வைத்துள்ளது. எடப்பாடி ஆட்சியில் ஊழல்  இல்லாத துறைகளே இல்லை.

கொரோனா காலத்தில்  மாஸ்க் வாங்கியதிலும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது. சாலை  போடுவதிலும், குப்பை அள்ளுவதிலும், நிலக்கரி வாங்கியதிலும் பல்லாயிரம் கோடி  ஊழல் நடந்துள்ளது. படித்த தமிழ் இளைஞர்கள்  வேலை இல்லாமல் வறுமையில் வாடும்  நிலையில், தமிழக மின்துறையில் வடமாநில இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்  அவலம் நீடிக்கிறது. திமுக ஆட்சிதான் அடுத்து அமையவுள்ளது. ஆட்சிக்கு  வந்தவுடன் சாயப்பூங்கா, சுத்திகரிப்பு  நிலையம் அமைக்கப்படும்.  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தரமான பொருட்கள் ரேஷன்  கடைகளில் கிடைக்கும். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தொழில் துவங்க  சுழல்நிதி வழங்கப்படும். தமிழ்நாட்டை டெல்லியின்  பிடியிருந்து மீட்டு,  சுயமரியாதையோடு ஆட்சி செய்யப்படும். அதற்கு அனைவரும் திமுக வேட்பாளர்களை  ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.

Related Stories: