நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்த வைகைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக சார்பில் டிஜிபியிடம் புகார்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்த அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைமைக்கழக வழக்கறிஞர் முத்துகுமார் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, அவர்  அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திமுக தலைமைக் கழக வழக்கறிஞராக பொறுப்பு வகித்து வருகிறேன். கடந்த 7ம் தேதி திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை அம்பத்தூரில்  நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, ஆளுங்கட்சியின் முதல்வர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுக்கப்பட்ட ஊழல் புகார் குறித்தும், அதன்மீது சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றியும், தமிழ்நாட்டில்  உள்ள சட்டம், ஒழுங்கு சீர்கேடு பற்றியும் பல்வேறு ஆதாரங்களுடன் பேசினார்.

ஆனால், உண்மைக்குப் புறம்பாக மக்களிடையே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கோடு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் உண்மைக்கு புறம்பாக அனைத்து  செய்திகளையும் திரித்து கூறியதோடு மட்டுமல்லாமல், திமுக அமைப்புச் செயலாளர் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரைப் பற்றி பொதுவெளியில் தரக்குறைவாக, அருவருக்கத்தக்க வார்த்தைகளாலும் தொடர்ந்து பேசியும், மேலும்  அவருடைய பேச்சுகள் மூலம் அதிமுக கட்சியினரை அறிக்கை மூலம் வன்முறையில் ஈடுபட தூண்டிவிட்டு வருகிறார்.

மேலும், கொரோனா காலத்தில் அமைப்புச் செயலாளர் மீது போடப்பட்ட வழக்கிற்காக, நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று இருந்ததையும், தனிப்பட்ட முறையில் திரித்துக் கூறியும், நீதிமன்ற உத்தரவையும் களங்கப்படுத்தும் நோக்கோடு தொடர்ந்து  பேசி வருகிறார். எனவே, மேற்படி சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு, கொலை மிரட்டல், அவதூறு பரப்புதல், மக்களிடையே வன்முறையை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தல், நீதிமன்ற உத்தரவுகளை தனிப்பட்ட  ஆதாயத்திற்காக திரித்து கூறி, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: