குப்பைக் கிடங்காகும் அதிரை கிழக்கு கடற்கரை சாலை

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகர் பகுதியில் இருந்து ராஜாமடம் செல்லும் வழியில் மகிழங்கோட்டை பிரிவு சாலைக்கு அருகில் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதில் மீன் கழிவுகள், கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் என அனைத்து கழிவுகளும் சாலையோரங்களில் கொட்டப்பட்டு சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அங்கு நாய்கள், பறவைகள், கால்நடைகள் மேய்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருந்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள், பேருந்துகளில் வரும் பயணிகள் இந்த இடத்திற்கு வரும் போது முகம் சுழிக்கும் நிலை நீடித்து வருகிறது. கழிவுகள் எங்கிருந்து வருகிறது, யார் வந்து கொட்டுகிறார்கள் என்பதுகூட இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. இரவு நேரங்களில் வந்து கொட்டி விட்டுச் செல்வதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக குப்பைகளை அகற்றவும் சாலையோரங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென வாகன  ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: