மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் அதிமுக அரசு ஆர்வம் காட்டுவதில்லை: சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ

* நீங்கள் மேயராக இருந்த சென்னைக்கும், இப்போது உள்ள சென்னைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? நான் மேயராக இருந்த போது மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்களுக்கு, மேயர் என்று அனைவருக்கும் செல்போன் நம்பர் வழங்கப்பட்டது. அந்த நம்பர் வெளிப்படை தன்மையாக இருந்தது. அதற்கு பிறகு வந்த நிர்வாகத்தில் உள்ளாட்சி நிர்வாகிகளின் யார் நம்பரும் வெளியே தெரியவில்லை. அப்போது மக்களின் பிரச்னைகள் எளிதில் தீர்க்கும் வகையில் நிர்வாகம் இருந்தது. இப்போது அது இல்லை.

*  மாநகராட்சி அதிகாரிகள் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது?

அவசரம், அவசரமாக டெண்டர் விடுவதிலேயும், கமிஷன் வாங்குவதிலும் தான் இந்த ஆட்சியாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பிரச்னைகளில் காட்டுவதும் இல்லை, செய்வதும் இல்லை.  

*   சாலையை விட நடைபாதைகள் பெரிதாக போடப்பட்டு வருகிறதே?

சாலைகளை அகலப்படுத்தினால் தான் வாகனங்கள் தடையின்றி செல்ல வசதியாக இருக்கும். திமுக நிர்வாகத்தில் 20க்கும் மேற்பட்ட சாலைகள் அகலப்படுத்தப்பட்டது. இப்போது இருக்கிற சாலைகளை சுருக்கி, நடைபாதையை பெரிதாக போடுகிறார்கள். அந்த நடைபாதைகள் வெறும் வாகனம் நிறுத்தும் இடமாக தான் பயன்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் வேளச்சேரி ரோடும், அஞ்சு பர்லாங் ரோடும் இப்படி செய்தார்கள். நான் உடனே போய் தடுத்து நிறுத்தினேன். ஒரு சில சாலைகளை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தது. சென்னை முழுவதும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

*  மக்கள் பிரச்னைக்காக நிறைய போராட்டம் நடத்தியுள்ளீர்கள். போராட்டங்களுக்கு பலன் கிடைக்கிறதா?

இவர்களால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. மாநகராட்சி எல்லைக்குள் வீதிமிறி இருக்கின்ற 8 டோல்கேட்டுகளை அகற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம். போராட்டம் நடத்தியதும் திமுக தலைவர் ஒரு டிவிட் போட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இதனை அகற்றுவோம் என்று ெசால்லியிருக்கிறார். அந்த பகுதி மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறோம். மதுரவாயல் டூ துறைமுகம் மேம்பாலத்தை கட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம். தலைவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். எடப்பாடி அரசு உடனடியாக பாலத்தை கட்ட வேண்டும். அப்படி கட்ட மாட்டாங்க என்று தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்து பணிகளை செய்வோம் என்று சொல்லியிருக்கிறார். இதே போன்று பட்டா பிரச்னை, வேளச்சேரியா வெள்ளச்சேரியா என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இந்த ஆட்சி நல்லது செய்யும் என்று மக்களுக்கு நம்பிக்கை இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் செய்வார்கள் என்ற நம்பிக்கையை விளைவித்து இருக்கிறோம்.

Related Stories: