நீட் பயிற்சி தர அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களால் முடியாதா? செங்கோட்டையனுக்கு வேல்முருகன் கேள்வி

சென்னை: நீட் தேர்வுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் சொல்லியிருப்பது வெட்கக் கேடானது என்று வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நீட் தேர்வு தனியார் வணிகக் கொள்ளைக்கு வழி வகுக்கும் என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறோம். இதனையெல்லாம் உறுதிப்படுத்தும் விதமாக, மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என்றும்  அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்றும், அதனால் தான் தனியார் மூலம் இணைய வழியில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் கொஞ்சம் கூட வெட்கமின்றி கூறுகிறார்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

தனியார் மூலம் கல்வி கற்க, பயிற்சி பெற அரசு எதற்கு என்பதை கொஞ்சம் கூட சிந்திக்காத நிலைக்கு தமிழக அரசும், அமைச்சர்களும் உள்ளனர் என்பது வேதனைக்குரியது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டு, தனியார் மூலம் இணைய வழியில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது என ஒரு அமைச்சரே கூறுவது, தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்களது கருத்து. அதுவரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தேவையான பயிற்சி வசதிகளை உயர் நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: