செய்யாறு அடுத்த தண்டரை கிராமத்தில் கால்வாயை ஆக்கிரமித்து மணல் கொள்ளையர் அமைத்த பாதை அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

செய்யாறு: செய்யாறு அடுத்த தண்டரை கிராமத்தில் மணல் கடத்துவதற்கு வசதியாக கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட பாதை தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டுள்ளது. செய்யாறு அடுத்த தண்டரை கிராமம் ஆற்றுப்படுகையில் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டில் இருந்து மழைநீர் பிரிந்து, ஏரிகளுக்கு செல்வதற்காக 14 கி.மீ. தூரம் அமைந்துள்ள கால்வாயை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர். தொடர்ந்து, முறையான பராமரிப்பு பணிகளை செய்யாததால் கால்வாயில் மீண்டும் முட்புதர்கள், ஆகாயத்தாமரைகள் வளர்ந்தது. இதனால் மழைநீரானது கால்வாயில் செல்லாமல் வீணாகி வந்தது.

இந்நிலையில், ஆற்றில் கொள்ளையடிக்கும் மணலை எளிதில் கொண்டு செல்ல வசதியாக, செய்யாறு ஜெயினர் கோயில் அருகே மணல் கொள்ளையர்கள் கால்வாயில் முரம்பு மண்ணை கொட்டி பாதையாக மாற்றி கொண்டனர். தொடர்ந்து, அந்த பாதை வழியாக வாகனங்களில் மணலை கடத்தி சென்றதுடன் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து கடந்த 6ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. மறுநாளே வருவாய்த்துறை ஆலோசனைபேரில் பொதுப்பணித்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம், கால்வாயை மறைத்து அமைத்திருந்த பாதையை அதிரடியாக அகற்றியுள்ளனர். இதனால் அவ்வழியாக மணல் கடத்தும் வாகனங்கள் சென்று வருவது தடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: