டிடிவி தினகரனிடம் இருந்து சசிகலாவை காப்பாற்ற வேண்டும்' - அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

விழுப்புரம்: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு சிறையில் இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று முன்தினம் 23 மணி நேர பயணத்துக்கு பிறகு சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் சசிகலா, பெங்களூரு மருத்துவமனையில் இருந்து பண்ணை வீட்டுக்கு செல்லும்போது அதிமுக கொடி கட்டிய காரில் பயணம் செய்தார். அதிமுக உறுப்பினராகவே இல்லாத ஒருவர் எப்படி அதிமுக கொடியை பயன்படுத்தலாம் என்ற விமர்சனம் எழுந்தது.

இதனால் சசிகலா மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் கடந்த வாரம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் நேரில் சென்று புகாரும் அளித்திருந்தனர். விழுப்புரத்தில் சமூக நலத்துறை சார்பாக பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழா காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. இந்த விழா சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது; சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக சட்டப்படி வழக்கு தொடரப்படும். சசிகலாவுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். டிடிவி தினகரனிடம் இருந்து சசிகலாவை காப்பாற்ற வேண்டும். அ.தி.மு.க. என்பது 1½ கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமாகும். இனி ஒருபோதும் குடும்பத்தின் பிடியில் சிக்காது. இனி ஒருபோதும் சசிகலாவையும் டிடிவி தினகரனையும் அதிமுகவுடன் இணைக்க முடியாது என கூறினார்.

Related Stories: