ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக; மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது: திருப்பூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு

திருப்பூர்: மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது வளர்மதி பாலம் பகுதியில் பேசிய அவர்; மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது;  மின்சாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உபரி மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாடு மின்சாரத்துறை உயர்ந்துள்ளது.

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், திருப்பூர் மாநகர மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1,086 கோடியில் குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.200 கோடி வட்டியில்லா கடன் தொகை மூலம் சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. ரூ.604 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது; இது மக்களின் அரசு.

சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. விவசாயிகள், மாணவர்கள் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என கூறினார்.

Related Stories: