தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம்

பெங்களூரு: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி நேற்று பெங்களூரு மாகடிரோடு போலீஸ் நிலையத்தை சேர்ந்த ஏ.எஸ்.ஐ ஒருவர் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ததுடன் துண்டுபிரசுரமும் வழங்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  பெங்களூரு போலீசார் தரப்பில் கடந்த சில நாட்களாக வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். மக்களோடு மக்களாக சாலைகளில் இறங்கிய போக்குவரத்து போலீசார்,  துண்டுபிரசுரம் மற்றும் விழிப்புணர்வு பாடங்களை நடத்த தொடங்கினர்.  அதன்படி மாகடிரோடு போக்குவரத்து போலீசார் சார்பில் ஏ.எஸ்.ஐ வெங்கடேஷ் என்பவர் தலைமையில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இவர் ஆட்டோ, லாரி, கார் டிரைவர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டகூடாது, சீல்பெல்ட் அணியவேண்டும் என்பது உள்பட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை எடுத்துரைத்து, அறிவுரை வழங்கினார். அப்போது ஏ.எஸ்.ஐ வெங்கடேஷ் கூறியதாவது; ‘‘சாலை பாதுகாப்பு, உயிர்பாதுகாப்பு” என்ற பெயரில் 32வது சாலை பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஜன.18ம் தேதி தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரசாரம், பிப்.17ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நாட்களில் ஒவ்வொரு வாகன ஓட்டிகளையும் சந்தித்து, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பிரசாரம் செய்து வருகிறோம். கொரோனா காலக்கட்டத்தில் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இன்றில் இருந்து மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் இதற்கு முன்பு இருந்ததுபோன்று அபராதம் கிடையாது, 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றார். பெங்களூரு முழுவதும் கடந்த சில நாட்களாக போக்குவரத்து போலீசார் இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

யாரும் தப்ப முடியாது

பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, இதுவரை அவர்கள் எவ்வளவு முறை விதிமுறைகளை மீறினார்களோ அவை அனைத்திற்கும் சேர்த்து அபராதம் வசூலிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எனவே எந்த இடங்களில் விதிமுறைகளை மீறனாலும் வாகன ஓட்டிகள் தப்ப முடியாது. மேலும் என்றாவது ஒருநாள் ஒட்டுமொத்த அபராத தொகையை செலுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் செக் வைத்துள்ளனர். அதன்படி கடந்த 2017ம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை 95 லட்சம் போக்குவரத்து விதிமுறை வழக்குகள் தொடர்பான வாகனங்களின் பட்டியலை போலீசார் பட்டியலிட்டு வைத்துள்ளது. இதன் மூலம் ₹390 கோடி வசூலாக வேண்டியிருக்கிறது. அவற்றை வசூலிக்கவேண்டிய கட்டாயத்தில் போலீசார் ஈடுபட்டிருப்பதால், இனி வாகன ஓட்டிகள்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மாட்டிகொள்ளும்போது எந்தவிதமான சிபாரிசும் எடுபடாது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: