அமித் ஷா சென்று வந்த 48 மணி நேரத்தில் சிவசேனாவுக்கு 7 பாஜ கவுன்சிலர்கள் ஓட்டம்

மும்பை: மகாராஷ்டிராவுக்கு அமித் ஷா சென்று வந்த 48 மணி நேரத்தில் பாஜக கட்சியை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் சிவசேனா கட்சியில் இணைந்தனர். இந்த விவகாரத்தில் முதல்வருக்கு பாஜக எம்எல்ஏ ஒருவர் காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 7ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிரா  மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அப்போது அந்த  நிகழ்வில் பேசும் போது, ‘மாநிலத்தில் ஆளும் கூட்டணி, ஆட்டோ ரிக்‌ஷாவின்  மூன்று சக்கரங்களும் வெவ்வேறு திசைகளில் இயங்குகின்றன’ என்றார். இவ்வாறாக இவர் பேசிவிட்டு சென்ற 48 மணி நேரத்திற்குப் பிறகு, பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜக கட்சியை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் சேர்ந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பாஜக மாநிலங்களவை எம்பியான நாராயண ரானேவின் ஆதரவாளர்கள் மற்றும் வைபவாவடி நகர் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள். சிவசேனாவுக்கு தாவிய கவுன்சிலர்களில் சிலர், நாராயண ரானேவின் குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படும் துன்புறுத்தலை தாங்க முடியாமல் பாஜகவை விட்டு வெளியேறுவதாக குற்றம் சாட்டினர். இந்த 7 கவுன்சிலர்களும் முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் விரைவில் சிவசேனாவில் இணைவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுெதாடர்பாக கங்கவலி பாஜக எம்எல்ஏ நிதேஷ் ரானே வெளியிட்ட வீடியோவில், ‘அன்புள்ள உத்தவ்ஜிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்! சிவசேனா கட்சிக்கும் எங்களுக்கும் பழைய காதல் உள்ளது. எங்களின் அன்பை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. எங்களது லட்சியங்கள் மறைந்த பால்தாக்ரேவின் கனவுகளை நினைவாக்குவதுதான். நாங்கள் அவரை என்றும் மதிக்கிறோம். அவரால் உருவாக்கப்பட்ட சிவசேனா கட்சி வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ள, பாஜக 7 கவுன்சிலர்களை உங்களுக்கு அனுப்புகிறது. உள்ளாட்சி தேர்தலில் உங்கள் கட்சியில் ஆள் இல்லாத நிலையில் அந்த குறையை நீக்க இந்த ஏழு கவுன்சிலர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: