புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம்!: முதல்வர் நாராயணசாமி பேட்டி

டெல்லி: குடியரசு தலைவரை சந்தித்தது ஏன் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம் என நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் வேண்டுமென்றே மக்கள் நல திட்டங்களை காலதாமதம் செய்து தடுத்து நிறுத்தியது. புதுச்சேரி மாநில மக்களுக்கு இலவச அரிசி திட்டத்தை மாநில அரசு நிதியில் இருந்து நிறைவேற்றுவதற்கு கிரண்பேடி தடையாக இருப்பது. தமிழகத்தில் அளிக்கப்பட்டதை போல புதுச்சேரி மாநில அரசுப்பள்ளியில் படித்த மாணவ, மாணவியருக்கு நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் 10 சதவீத இடஒதுக்கீடு கோப்பை டெல்லிக்கு அனுப்பி அதை தடுத்து நிறுத்தியது.

அதிகாரிகளை தன்னிச்சையாக அழைத்து அவரது அலுவலகத்தில் கூட்டம் போடுவது. அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவிடுவது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை முடிவுகளை நிறைவேற்றாமல் திருப்பி அனுப்புவது. கிரண்பேடியை எதிர்த்து 21 அரசியல் கட்சிகள் ஒத்துமொத்தமாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து அவரை இந்திய குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து தர்ணா போராட்டம் நடத்தியது. உண்ணாவிரதம் இருந்தது. 1 லட்சம் கையெழுத்து பெற்று கையெழுத்து பிரதிகளை குடியரசு தலைவருக்கு அளித்தது.

கிரண்பேடி அம்மையார் கொரோனா தொற்று முடிந்தபிறகு மாநில அரசு வரிகளை குறைக்க வேண்டும் என்று எடுத்த முடிவுகளை நிராகரித்தது. இவ்வாறு நிர்வாகத்தில் கிரண்பேடி அவர்களின் செயல்பாடுகள் புதுச்சேரி மாநில மக்களை வஞ்சிக்கின்ற முறையில் அமைந்துள்ளது என்பதை குடியரசு தலைவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தோம். புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு எதிராக ஆளுநர் கிரண்பேடி செயல்படுவதால் அவரை திரும்ப பெற வேண்டும் என்று கோரி குடியரசு தலைவரை சந்தித்தோம் என நாராயணசாமி செய்தியாளர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.

Related Stories: