1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நடிகர் தீப் சித்து கைது: டெல்லி வன்முறை வழக்கில் அதிரடி

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 26ம் தேதி விவசாயிகள் பேரணியின்போது செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் தொடர்புடையதாக நடிகர் தீப் சித்துவை போலீசார் நேற்று கைது செய்தனர். டெல்லியில் கடந்த 26ம் தேதி குடியரசு தின விழாவின்போது விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. விவசாயிகள், போலீசாரிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு குழுவினர் டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மத கொடியை ஏற்றினர். பொதுச் சொத்துக்கள் சேதம் செய்யப்பட்டது. வன்முறையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், செங்கோட்டையில் நடந்த வன்முறையை தூண்டி விட்டதாக நடிகர் தீப் சித்து உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அவரை பற்றி தகவல் தெரிவித்தால் 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். இதனால், அவர் தலைமறைவாகி விட்டார். சண்டிகர் அருகே சிராக்பூரில் பதுங்கியிருந்த அவர், நேற்று சிறப்பு படையால் கைது செய்யப்பட்டார். 7 நாள் போலீஸ் காவல்: கைது செய்யப்பட்ட தீப் சித்துவை டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். அவரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி நீதிபதியிடம் கோரினர். அதை நிராகரித்த நீதிபதி, 7 நாட்கள் மட்டுமே காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார்.

Related Stories: