கிழக்கு கிடைக்கணுமே... கூட்டணி கொடுக்கணுமே? மதுரையில் நடக்குது மல்லுக்கட்டு

மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், மதுரை கிழக்கு தொகுதியில், அதிமுக சார்பில் மாஜி எம்பி கோபாலகிருஷ்ணன், அதிமுக முன்னாள் வேட்பாளர் தக்கார் பாண்டி மற்றும் எஸ்.என்.ராஜேந்திரன் ஆகியோர் சீட் கேட்டு, கட்சி தலைமையிடம் போராடி வருகின்றனர். இவர்களில் துணை முதல்வர் ஆதரவாளர் என்பதால் கோபாலகிருஷ்ணன், தனக்கு சீட் கிடைப்பது உறுதி என தொகுதிக்குள் சொல்லி வருகிறார். எம்பியாக இருந்தபோதே இருந்த இடம் தெரியாமல் இருந்தவர் என்பதால், இவர் மீது மாவட்டம் மற்றும் அதிமுக தலைமையிடத்தில் நல்ல பெயர் இல்லை. யாருக்கு சீட் கொடுக்கலாம் என தலைமை ஆலோசிக்கும் நேரத்தில், பாஜ மாவட்ட தலைவர் மகா சுசிந்தீரன், இத்தொகுதியை கேட்டு கட்சி மேல்மட்ட தலைவர்களிடம் பல்வேறு ‘தில்லாலங்கடி வேலையை’ செய்து வருகிறாராம்.

இதற்காக தொகுதியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தை மாநாடு போல் நடத்தி, அதில் பாஜ மாநில தலைவரை அழைத்து வந்து பேச வைத்தார். மேலும், நடிகை குஷ்பு, மற்றும் மத்திய அமைச்சர்களை வைத்து கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். உச்சக்கட்டமாக, பொங்கல் விழாவில் ‘பஞ்சு பொங்கல்’ வைத்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வாய்ப்பை ‘வாரி’ வழங்கினார். கட்சி அலுவலகத்தை சூறையாடியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்த பார்த்தார். எதுவுமே சரிப்பட்டு வரவில்லை. எப்படியாவது இத்தொகுதியை பாஜ கேட்டு பெறவேண்டும் என கட்சியின் மேல்மட்ட தலைவர்களிடம் நெருக்கடி கொடுத்து வருகிறாராம்... மறுமுனையில் அதிமுக தரப்பும் தொகுதியை விட்டு தரக்கூடாது என போராடுகிறதாம்.

Related Stories: