டெல்லி வன்முறை வழக்கில் தலைமறைவான நடிகர் தீப் சித்து சண்டிகரில் அதிரடி கைது: 7 நாள் போலீஸ் காவல்

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 26ம் தேதி விவசாயிகள் பேரணியின்போது  செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் தொடர்புடையதாக நடிகர் தீப்  சித்துவை போலீசார் நேற்று கைது செய்தனர். மத்திய அரசின் புதிய வேளாண்  சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். கடந்த 26ம் தேதி குடியரசு தின விழாவின்போது விவசாயிகள்  நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. விவசாயிகள், போலீசாரிடையே  மோதல் ஏற்பட்டது. ஒரு குழுவினர் டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மத கொடியை  ஏற்றினர். பொதுச் சொத்துக்கள் சேதம் செய்யப்பட்டது. வன்முறையில் 400க்கும்  மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில்,  செங்கோட்டையில் நடந்த வன்முறையை தூண்டி விட்டதாக நடிகர் தீப் சித்து உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். இதனால், அவர் தலைமறைவாகி விட்டார். சண்டிகர் அருகே சிராக்பூரில் பதுங்கியிருந்த அவர், நேற்று சிறப்பு படையால் கைது செய்யப்பட்டார்.

 

இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், ‘‘சித்துவுக்கு கலிபோர்னியாவில் பெண் தோழி இருக்கிறார். வீடியோக்களை எடுத்து  அவருக்கு சித்து அனுப்புவார். அவரது தோழி அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம்  செய்வார். கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக அவர் இருக்கும் இடத்தை மாற்றிக்  கொண்டே இருந்தார்,” என்றார். இதற்கிடையே நடிகர் தீப்சித்துவை டெல்லி மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது செங்கோட்டை வன்முறை வழக்கில் தீப் சித்து முக்கிய குற்றவாளி என்பதால் அவரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர்.

ஆனால் சித்து சார்பில் ஆஜரான வக்கீல் கூறும்போது, ‘ எனது கட்சிக்காரருக்கும் செங்கோட்டை கலவரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரக்யா குப்தா, கைது செய்யப்பட்ட நடிகர் தீப் சித்துவுக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.

2 விவசாயிகள் பலி

அரியானா மாநிலம், ரோடாக் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தீபக் (28). திக்ரி எல்லையில்  நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் தன்னார்வலராக பல்வேறு உதவிகளை செய்து  வந்தார். கடந்த 5ம் தேதி டிராக்டருடன் இணைக்கப்பட்டு இருந்த டிரோலியில்  தீபக் அமர்ந்தபடி விவசாயிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி வந்தார். அப்போது  எதிர்பாராத விதமாக அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரோடக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதே போல் பானிப்பட் மாவட்டம் சிவாக் கிராமத்தை சேர்ந்த ஹரீந்தர்(50) என்ற விவசாயி சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வந்தார். காலைக்கடன் கழிக்க சென்ற போது அவர் பலியானார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பிரேதபரிசோதனை முடிவுகள் வந்தபிறகுதான் இதுபற்றி முழுவிவரமும் தெரிய வரும்.

Related Stories: