உத்தராகண்ட் பனிப்பாறை பேரழிவில் இருந்து மீட்கப்பட்டவர்களை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேரில் சந்தித்து ஆறுதல்..!!

டெஹ்ராடூன்: உத்தராகண்ட் பனிப்பாறை பேரழிவில் இருந்து காப்பாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுரங்க பணியாளர்களை அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். வெள்ளம் சூழ்ந்த சுரங்கத்தில் சிக்கியிருந்த 12 தொழிலாளர்கள் உள்ளிட்ட 16 பேரை பேரிடர் மேலாண்மை படையினர் உயிருடன் மீட்டனர். அவர்கள் சமோலியில் உள்ள இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவமனைக்கு சென்ற உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பனிப்பாறை பேரழிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 12 பேர் இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் நலமாக இருக்கின்றனர். வெள்ளத்தில் மூழ்காமல் தப்பிக்க அவர்கள் 3, 4 மணி நேரம் கம்பி ஒன்றை பிடித்து தொங்கியபடி உயிர் தப்பி இருக்கின்றனர்.

வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் சமோலியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள 360 குடும்பங்களை சந்திக்க சென்றுக் கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டார். இதனை அடுத்து சமோலி பள்ளத்தாக்கில் பனிப்பாறை பேரிடரால் ஏற்பட்ட சேதங்களை ராவத் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருவெள்ளம் பல்வேறு பாலங்களை அடித்து சென்றுவிட்டதால் ஏராளமான மலை கிராமங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மலை கிராம மக்களை கண்டறிந்து ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தராகண்ட் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: