சிறுபான்மையின மக்களுக்கு திமுக அரணாக உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அரவக்குறிச்சி: சிறுபான்மையின மக்களுக்கு திமுக அரணாக உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் கரூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னரில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை 40ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வெற்றி பெற வைக்க  வேண்டும்.

முதல்வர் எடப்பாடி, நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். படிப்படியாக வளர்ந்தேன் என கூறி வருகிறார். அவர்  எப்படி வளர்ந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்த எடப்பாடி, சசிகலா வருகையொட்டி நினைவிடத்தை மூடி வைத்துள்ளார். ஏன் என்றால், அவர் வந்து விட்டால் மீண்டும் சசிகலா காலில் விழுந்து விடுவோம் என அச்சப்படுகிறார். திமுக ஆட்சியில் கொடுத்த இலவச மின்சாரம் எடப்பாடி ஆட்சியில் மக்களுக்கு கிடைக்கிறதா? திமுக ஆட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் தொழில் துறைகள் எல்லாமே தமிழகத்தை விட்டு வேறு மாநிலம் நோக்கி சென்று விட்டன. இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சிறுபான்மையினருக்கு அரணாக திமுக உள்ளது. சிறுபான்மையினரை பாதுகாக்க சிஏஏ சட்டத்தை எதிர்த்து டெல்லி வரை போராடியது திமுக. நான் இளைஞரணி பொறுப்புக்கு வந்த பிறகு முதலில் இந்த சட்டத்தை எதிர்த்து போராடியே கைதானேன். மோடி அரசு சிறுபான்மையினரை பாதிக்கக்கூடிய சட்டங்களை ஏற்படுத்துகிறது. திமுக எப்போதும் உங்கள் பக்கம் தான் இருக்கும். இந்த முறை திமுகவிற்கு நீங்கள் மிகப் பெரிய வெற்றியை தர வேண்டும் என்றார். வேலாயுதம்பாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மோடிக்கு தமிழகத்தை பிடிக்காது. காரணம், தமிழகத்தில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுகவை வெற்றி பெற வைத்ததுதான்.   இந்தியளவில் திமுக 3வது பெரிய கட்சியாக உருவெடுக்க காரணம் தமிழக மக்கள்தான். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் அல்ல, 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நிலைதான் உள்ளது. இவ்வாறு அவர்   பேசினார்.

Related Stories: