சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி: டிடிவி.தினகரன் தகவல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: தமிழகம் முழுக்க தன்னெழுச்சியாக நடைபெறும் வரவேற்பு ஏற்பாடுகளைப் பார்த்து பதற்றமடைந்திருக்கும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்களே மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். இவர்கள் டி.ஜி.பி அலுவலகத்திற்கு படையெடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் திட்டமிட்டு எதாவது செய்துவிட்டு தொண்டர்கள் மீது பழியைப் போடுவதற்கு சதித்திட்டம் தீட்டுகிறார்களோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்திருக்கிறது.

 

உண்மைத் தொண்டர்கள் உணர்வு ரீதியில் காட்டும் பாசமெல்லாம் கூலிக்கு ஆட்களைத் திரட்டும் இவர்களுக்குப் புரியாது. அதனால்தான் யாரால் அமைச்சர் பதவியிலிருக்கிறோம் என்பதையே பட்டவர்த்தனமாக மறந்துவிட்டு சசிகலா மீது புழுதிவாரி தூற்றி இழிவுபடுத்துகிறார்கள். பதற்றத்தில் இருக்கும் இவர்கள் எத்தகைய பாதகத்தையும் செய்திட துணிந்தவர்கள் என்பதால் சசிகலாவிற்கு நாம் அளிக்கும் வரவேற்பை மிகுந்த கவனத்தோடு அமைத்துக்கொள்ள வேண்டும். போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித இடையூறும் இல்லாத வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். சென்னை உள்ளிட்ட இடங்களில் வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை நமக்கு அனுமதி அளித்திருக்கிறது. எனவே, வருகிற சட்டமன்றத் தேர்தலில் நமது பணியை முழு  உத்வேகத்தோடு முன்னெடுத்திடுவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: