மத்திய பட்ஜெட்டில் சேலம்-மேட்டூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு ₹60.5 கோடி நிதி ஒதுக்கீடு: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்

சேலம்: மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மிக குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், திட்டப்பணிகள் நடக்கும் காலம் மேலும் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்-மேக்னசைட்-ஓமலூர் இரட்டை வழிப்பாதை திட்டம், ஓமலூர்-மேட்டூர் அணை இரட்டை வழிப்பாதை திட்டம், சேலம்-கரூர்-திண்டுக்கல் இரட்டை வழிப்பாதை திட்டம், சேலம்-விருத்தாச்சலம்-கடலூர் பாதை மின்மயமாக்கல், சின்னசேலம்-கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில்பாதை திட்டம் பொள்ளாச்சி-போத்தனூர் பாதை மின்மயமாக்கல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் சில திட்டங்களை மட்டும் நடப்பு நிதியாண்டில் முடித்திட நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான திட்டங்களுக்கு, அதனை பயன்பாட்டில் வைத்திருப்பதற்கான டோக்கன் தொகையை மட்டும் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளனர்.

இதனிடையே தமிழக ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பாக நேற்று, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் நிருபர்களிடம் தெரிவித்தார். அதில், சேலம் ரயில்வே கோட்டத்தில் நடக்கும் திட்டப்பணிகளில், சேலம்-மாக்னசைட்-ஓமலூர் இரட்டை வழிப்பாதை திட்டத்திற்கு ₹35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியை வரும் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஓமலூர்-மேட்டூர் அணை இரட்டை வழிப்பாதை திட்டத்திற்கு ₹25.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளாக பணிகளை மேற்கொண்டு, ஏற்கனவே இறுதிக் கட்டத்திற்கு சென்றுவிட்டதால், இப்பணி வரும் மார்ச் மாத இறுதிக்குள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சேலம்-விருத்தாசலம் ரயில்வே மார்க்கத்தில் சின்னசேலம்-கள்ளக்குறிச்சி இடையே புதிய அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ₹15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணியை வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதேபோல், சேலம்-விருத்தாசலம்-கடலூர் பாதையை 191 கி.மீ., தூரத்திற்கு மின்மயமாக்கும் பணி ₹50.22 கோடியில் நடந்து வருகிறது. இதனை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என பொதுமேலாளர் ஜான்தாமஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: