நாலா பக்கம்: புதுவை - கேரளா - மேற்கு வங்கம் - அசாம்

முஸ்லிம்கள் வாக்கை பெறபாஜ வியூகம்

அசாமில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வியூகங்களை செயல்படுத்த பாஜ திட்டமிட்டுள்ளது. மியா முஸ்லிம்கள் இக்கட்சிக்கு எதிரானவர்கள். அவர்கள் எப்படியும் வாக்களிக்கப் போவதில்லை. அதனால், அவர்களின் ஆதரவைப் பெற முட்டி மோத வேண்டாம். மியா முஸ்லிம்களைப் புறக்கணிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இதை அம்மாநில நிதி அமைச்சர் ஹிமாந்த் பிஸ்வா சர்மா வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். ‘அசாமில் இருக்கும் இந்திய முஸ்லிம்கள் பாஜ.வை ஆதரிப்பார்கள். ஆனால், வங்கதேசத்தை சேர்ந்த மியா முஸ்லிம்கள் நமக்கு எதிரானவர்கள். அவர்களை கண்டுகொள்ள வேண்டாம். அதேபோல், இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்படும்’ என்று அவர் கூறியுள்ளார்.

கை பட்டால் குற்றம்கால் பட்டால் குற்றம்

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் களத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜ இடையேதான் உரசல் அதிகமாக இருக்கிறது. கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற ரீதியில், சிறிய விவகாரங்களையும் பாஜ பூதாகரமாக்கி வருகிறது. தேர்தலுக்காக மக்கள் ஆதரவை திரட்டுவதற்காக மாநிலம் முழுவதும் இந்த மாதமும், அடுத்த மாதமும் ரத யாத்திரை நடத்த, பாஜ திட்டமிட்டுள்ளது. பாஜ தலைவர் ஜேபி நட்டா. நபாத்விப் என்ற இடத்தில் இன்று இந்த யாத்திரையை தொடங்கி வைக்க உள்ளார். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை என்று பாஜ குற்றம்சாட்டி உள்ளது. இதற்கு பதிலடியாக மம்தா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எந்த ரத யாத்திரைக்கும் மேற்கு வங்க அரசு அனுமதி மறுக்கவில்லை. அவர்கள் (பாஜ) பொய் பிரசாரம் செய்கின்றனர். அனுமதி மறுக்கப்பட்டதாக கூறும் அவர்கள், அதற்கான ஆதாரங்களை காட்ட முடியுமா?’ என சவால் விட்டுள்ளது.

இப்போது வரை அவர்தான் கிங்

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் எம்.ஓ.எச் பாரூக் மரைக்காயர் என்ற பெயர் தவிர்க்க முடியாது. காரைக்காலில் பிறந்த அவர், தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரசில் இருந்து துவங்கினார். 1964ல் தனது 27வது வயதிலே சட்டப்பேரவைக்கு தேர்வாகி,  வெங்கடசுப்பா ரெட்டியார் அரசின்போது இளம் வயது சபாநாயகராகவும் பதவியேற்றார். பின்னர், 1967ம் ஆண்டு  காங்கிரஸ் ஆட்சியில் முதல்வரானார். அதன் பிறகு, அடுத்தடுத்து 3 முறையும் முதல்வர் பதவியை ஏற்றார்.  27 வயதில் சபாநாயகர், 29 வயதில் முதல்வர் என்ற பாரூக்கின் இந்த சாதனைகளை, புதுச்சேரி அரசியலில் இதுவரையில் யாரும் உடைக்க முடியவில்லை.

அரசியலில் நுழையும் ஐபிஎஸ் அதிகாரிகள்

கேரளா, தமிழகம் உள்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜ.வுக்கு தாவுவது, இணைவது, என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய கரூரை சேர்ந்த அண்ணாதுரை, பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜ.வில் இணைந்தார். தற்போது அவர் தமிழக பாஜ.வின் துணைத் தலைவராக இருக்கிறார். இதுபோல், முன்னாள் டிஜிபி, ஐபிஎஸ் மற்றும் அரசு அதிகாரிகள் தேசிய கட்சிகளான பாஜ.,, காங்கிரசில் இணைவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாஜ.வில் இந்த சேர்க்கை அதிகமாக உள்ளது. கேரளாவில் 2 நாட்களுக்கு முன்பு கூட, பாஜ தலைவர் ஜேபி.நட்டா, கேரள மாநில பாஜ தலைவர் சுசீந்திரன் முன்னிலையில் முன்னாள் டிஜிபி ஜேக்கப் தாமஸ் நேற்று தன்னை பாஜ.வில் இணைத்து கொண்டார். இவருக்கு எப்படி அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்கணும். இவருக்காக எந்த பதவி காத்திருக்கிறதோ என்று உள்ளூர் பாஜ பிரமுகர்கள் பேசி கொள்கின்றனர்.

Related Stories: