துணை வேந்தர் சூரப்பா மீதான புகாரை விசாரிக்கும் ஆணையத்தை நீட்டிக்கலாமா? என்பது குறித்து 2 நாளில் முடிவு: முன்னாள் நீதிபதி கலையரசன்.!!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகாரை விசாரிக்கும் ஆணையத்தை நீட்டிப்பது குறித்து 2 நாளில் முடிவெடுக்கப்படும் என முன்னாள் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா உள்ளார். சூரப்பா பதவியேற்று, 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், சூரப்பா நிர்வாகத்தில் டெண்டர், தேர்வு நடைமுறை, பேராசிரியர், பணியாளர் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது.

திருச்சி லால்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், அண்ணா பல்கலைக்கழக பணி நியமனத்தில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஒவ்வொரு நபரிடமும் ரூ.13 முதல் 15 லட்சம் வரை வசூல் செய்தாகவும் துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிராக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அனுப்பியிருந்தார். இதனை தொடர்ந்து, துணை வேந்தர் சூரப்பா மீது நிதி முறைகேடு புகார்களை விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. மூன்று மாதத்திற்குள் ஆணையம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் 11-ம் தேதியுடன் முடிவடையுள்ளதால், விசாரணைக்கு கால நீட்டிப்பு கோர கலையரசன் விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா விசாரிக்கும் ஆணையத்தை நீட்டிக்கலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து 2 நாளில் முடிவு செய்யப்படும் என ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: