வாக்கிங்கில் திமுக பிரசாரம் ஜெராக்ஸ் காப்பி அடிக்கும் அதிமுக

சென்னை வட கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாதவரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான மாதவரம் எஸ்.சுதர்சனம் கடந்த ஜனவரி 23ம் தேதி புழல் ஏரிகரையில் நடைபயிற்சி செல்லும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டார். அதனைத்தொடர்ந்து, செங்குன்றம் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகளையும் சந்தித்தார். செங்குன்றம் மார்க்கெட் நடைபாதை வியாபாரிகளையும் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர்களுக்கு உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட நிழற்குடை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, மாதவரம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அதிமுகவை சேர்ந்த மாதவரம் மூர்த்தி ஜனவரி 31ம் தேதி புழல் ஏரிகரையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார். இதுகுறித்து நடைப்பயிற்சி ஈடுபட்டிருந்தவர்கள் கூறுகையில், ‘‘சட்ட மன்ற தேர்தல் மிக விரைவில் வர உள்ளதால், திமுக சட்டமன்ற உறுப்பினரான மாதவரம் சுதர்சனம் நேரில் சந்தித்து, அவர்களது பிரச்னைகளை கேட்டார். அதைப் பார்த்து, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் மூர்த்தியும் பொதுமக்களின் குறைகளை கேட்டார். சட்ட மன்ற தேர்தல் நெருங்குவதால், திமுக மற்றும் அதிமுக கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்’’ என்றனர்.

Related Stories: