ரோடு போடச் சொன்னா... போர்டு போடும் எம்எல்ஏ: ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ மணிகண்டன்

2016 சட்டசபை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த மணிகண்டன், திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஜவாஹிருல்லா மற்றும் தேமுதிக, பாஜ, நாம் தமிழர், பார்வர்டு பிளாக் என மொத்தம் 17 பேர் போட்டியிட்டனர். இதில் ஜவாஹிருல்லாவை விட 33,222 வாக்குகள் கூடுதல் பெற்று அதிமுகவை சேர்ந்த மணிகண்டன் வெற்றி பெற்றார். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையிலிருந்து 2019ல் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார்.

மணிகண்டன் பலதரப்பட்ட வாக்குறுதிகளை தேர்தல் காலத்தில் வாரி வழங்கி இருந்தார். இதில், ‘‘ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் ஆகிய யூனியன்கள் மற்றும் ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய நகராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர் வசதி மேம்பாடு, தடையில்லா மின்சாரம் வழங்குவேன்’’ என்றார். ஆனால், தொகுதிக்குள் இன்று வரையிலும் அடிப்படை வசதிகளையே நிறைவேற்ற முடியாத அவல நிலையே தொடர்கிறது. சமீபத்தில் தன் வீட்டு முன்புறத்தில் மழைநீருடன் தேங்கிக் கிடந்து சுகாதாரச் சீர்கேட்டைத் தந்த கழிவுநீரை அகற்றக்கோரி, நகராட்சியை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த அளவிற்குத்தான் எம்எல்ஏவே அடிப்படை வசதிக்கு போராடும் நிலைதான் இங்கு இருக்கிறது.

மணிகண்டன் எம்எல்ஏ கூறும்போது. ‘‘தொகுதியில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி, கீழக்கரை உளளிட்ட பகுதிகளில் சாலைகள், தெருச்சாலைகள் 90 சதவீதம் போட்டுள்ளேன். மருத்துவக்கல்லூரி வாக்குறுதி நிறைவேறி இருக்கிறது. தமிழக அரசின் 40 சதவீத பங்களிப்போடு ரூ.325 கோடி நிதி ஒதுக்கீடு அறிவித்து, தமிழக அரசின் சார்பில் ₹100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கட்டிடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ராமநாதபுரத்தில் சட்டக்கல்லூரி, ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் முதல் கீழக்கரை வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பட்டிணம்காத்தான் முதல் அச்சுந்தன்வயல்  வரை ரூ.34 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து 2016 முதல் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இலங்கை கடற்படையால் படகுகள் பறிமுதலானதில், ராமேஸ்வரம், பாம்பன் பகுதியை சேர்ந்த 19 மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமணைக்கு 16 வென்டிலேட்டர்கள், எம்ஆர்ஐ ஸ்கேனர், ரத்த புற்றுநோய் கண்டறியும் கருவியும் தரப்பட்டுள்ளது’’ என்றார்.

ராமநாதபுரம் மாவட்டம், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா என்.ரகு கூறும்போது, ‘‘ராமநாதபுரத்தில் திமுக ஆட்சியில்தான் கூட்டு குடிநீர் திட்டம், அன்றைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. இது திமுக அரசு நிறைவேற்றிய திட்டம் என்பதால் அதிமுக அரசு கிடப்பில் போட்டது. இதற்கான அலுவலகத்தை, ராமநாதபுரத்தை விட்டு, சிவகங்கை மாவட்டத்தில் அமைத்தனர். இந்த அலுவலகத்தை, அதிகாரியை ராமநாதபுரத்திற்கு மாற்றுவேன் என்ற மணிகண்டன், இதுவரை அதைச் செய்யவில்லை. கூட்டு குடிநீர் திட்டமும் மாவட்டத்திற்கு கிடைக்கவில்லை.

மக்கள் விலை கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம் தொடர்கிறது. சொந்த தெரு, சொந்த வீட்டு சாக்கடைத் தண்ணீரையே அப்புறப்படுத்த முடியாமல், நடுரோட்டில் தர்ணாவில் இவர் ஈடுபட்டதிலிருந்தே, இந்த அதிமுக ஆட்சியின் லட்சணமும், இவரின் திறமையின்மையும் கண்ணாடியாகத் தெரிகிறது. இதுவே அதிமுக ஆட்சி லட்சணத்தின் அத்தாட்சி. தேர்தல் காலத்தில் ஓட்டுகளுக்காக மீனவர்களுக்கு தோழனாக இருப்பேன் என்று மணிகண்டன் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டிலும், படகு கவிழ்ந்தும் மீனவர்கள் தினம் சாகின்றனர்.

ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் அலட்சியம்தான் இவரிடம் இருக்கிறது. தொகுதிக்குள் எந்த சாலையும் மேம்படுத்தப்படவில்லை. ஆனால், மணிகண்டன் தெருவிற்குத்தெரு தன் பெயரைப் போட்டு சீரமைத்ததாக போர்டு வைத்துள்ளார். ரோடு போடாமல், போர்டு மட்டுமே வைத்தவர் இவராகத்தான் இருக்க முடியும். தொகுதி மக்கள் அதிமுகவை புறக்கணிக்க தயாராகி விட்டனர். அடித்தட்டு மக்கள் துவங்கி, வியாபாரிகள் வரை அனைவருமே திமுக ஆட்சிக்கு வருவதை முழு மூச்சோடு, பெரும் விருப்பத்தோடு ஆதரிக்கின்றனர்’’ என்றார்.

Related Stories: