துப்பரவு பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்தால் அதிகாரிகளின் அலுவலகம் முன்பாக குப்பைகளை கொட்ட உத்தரவிடப்படும்: என்டிஎம்சி நிர்வாகத்துக்கு நீதிபதி எச்சரிக்கை

புதுடெல்லி: மாடல் டவுன் வீதிகளில் குப்பைகளை திறந்தவெளியில் கொட்டுவோர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என வடக்கு மாநகராட்சி(என்டிஎம்சி) நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வடக்கு மாநகராட்சியின்  துப்புரவு தொழிலாளர்கள் கடந்த மூன்று வாரங்களாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் குப்பைகளை லாரிகள் கொண்டு வந்து  மாடல் டவுன் வீதிகளின் மார்க்கெட், குடியிருப்பு பகுதிகளில் கொட்டி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட  அப்பகுதி மக்களின் சார்பில், மாடல் டவுன் சங்க கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்த்தில் பொதுநல மனுவை  தாக்கல் செய்தனர். அதில், கொரோனா பரவும் அசாதாரணமான சூழல் நிலவும் இந்த காலத்தில் துப்பரவு பணியாளர்கள் குப்பைகளை மாடல் டவுன் தெருக்களில் கொட்டுகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. கடந்த  மூன்று வாரங்களாக துப்பரவு பணியாளர்கள் தங்களது கடமையிலிருந்து விலகி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது  அதிகாரிகளின் செயலை கண்டித்த நீதிபதி, தெருக்களில் குப்பைகளை கொட்டுவோர் மீது ஏன் வழக்கு தொடரவில்லை என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் நாளை மறுநாள் நடைபெறும் விசாரணையின் போது மாநகராட்சியின் துணை  ஆணையர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணையில் பங்கேற்க வேண்டும். அதற்குள்ளாக இந்த பிரச்னைக்கு தீர்வுகாணப்பட்டு துப்புரவு பணியாளர்கள் பணிக்கு திரும்பினால், துணை ஆணையர் விசாரணையில் பங்கேற்க தேவையில்லை.  மாறாக, மாடல்டவுன் பகுதிவாழ் மக்கள் குப்பைகளை கொண்டு வந்து என்டிஎம்சி அலுவலகம் முன்பாக கொட்டும் நிலைக்கு தள்ள உத்தரவிடப்படும் என கூறி, வழக்கை பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related Stories: