தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை: மத்திய பட்ஜெட்டால் நடுத்தர மக்கள் ஏமாற்றம்.!!!

டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான உச்சவரம்பில் எந்த மாற்றமும் இன்று தாக்கல்  செய்யப்பட்ட 2021-22-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின்  தலைமையிலான மத்திய அரசு இன்று தனது 8வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

மத்திய நிதியமைச்சராக பதவியேற்றப்பின் நிர்மலா சீதாராமன் தனது 3-வது மத்திய பட்ஜெட்டை  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக இந்த முறை 2021-2022-ம்  ஆண்டில் மத்திய பட்ஜெட் வித்தியாசமான முறையில் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவில் முதன்  முறையாக காகிதம் இல்லாத வகையில், டிஜிட்டல் முறையில் Union Budget என்ற மொபைல் செயலி மூலம்  மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, மத்திய பட்ஜெட் என்றாலே மாத சம்பளம் வாங்குபவர்கள் உள்ளிட்ட பலருக்கும், மிகுந்த  எதிர்பார்ப்பாக இருப்பது. தனிநபர் வருமான வரி உச்சவரம்பு தொடர்பான அறிவிப்புதான். இந்நிலையில்,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பில்  எந்த மாற்றமும் இல்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும், 70 வயதைக் கடந்த பென்ஷன் பெறும்  முதியவர்கள் வருமானவரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில், எந்த மாற்றமும் செய்யப்பட்வில்லை என்பது நடுத்தர மக்கள் மத்தியில் கவலையை  ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தனிநபர் உச்சவரம்பு பழைய நடைமுறையில் இருக்கும் என்று தெரிகிறது.

தற்போதைய நடைமுறைப்படி, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5% வரியும், ரூ.5,00,001 முதல்  ரூ.7,50,000 வரை 10% வரியும், ரூ.7,50,001 முதல் ரூ.10,00,000 வரை 15% வரியும், ரூ.10,00,001 முதல்  ரூ.12,50,000 வரையில் 20% வரியும் வருமான வரியாக கட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: