அதிமுக எம்.பி விஜயகுமார் சசிகலாவுக்கு ஆதரவா? டிவிட்டரில் வெளியிட்ட படத்தால் பரபரப்பு

நாகர்கோவில்: சசிகலா சென்ற கார் படத்தை அதிமுக எம்.பி. விஜயகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சசிகலா நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் சசிகலா சென்றார். அந்த காரில் அதிமுக கொடியும் கட்டப்பட்டு இருந்தது. இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளருமான விஜயகுமார் நேற்று மாலை தனது டிவிட்டர் பக்கத்தில், சசிகலா சென்ற கார் படத்தை பதிவிட்டு இருந்தார்.

இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை சேர்ந்த எம்.பி. ஒருவர், சசிகலா சென்ற கார் படத்தை பதிவிட்டு இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பலரும் லைக் தெரிவித்து இருந்தனர். இது குறித்து விஜயகுமார் எம்.பி.யிடம் கேட்ட போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயணித்த கார் என்பதுடன், அதிமுக கொடியும் கட்டப்பட்டு இருந்தது. பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் பதிவிட்டேன் என்றார். சமீபத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனும், சசிகலா குணமடைய பிரார்த்தனை செய்வதாக பதிவு வெளியிட்டு இருந்தார். பின்னர் மனிதாபிமானத்தின் அடிப்படையில் வெளியிட்ட பதிவு என கூறினார். சசிகலாவை வரவேற்று அதிமுகவில் உள்ளவர்கள் பதிவுகள் வெளியிடுவது, போஸ்டர்கள் ஒட்டுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: