தொடர்ந்து வெற்றியை கொடுக்கும் சேலம் தெற்கு தொகுதியில்: ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஓரம்கட்ட இபிஎஸ் வியூகம்

சேலம்: சேலத்தில் தொடர்ந்து 4 முறை அதிமுக வெற்றி பெற்ற சேலம் தெற்கு தொகுதியை பிடிக்க பாஜ, தேமுதிக இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ள நிலையில்,  ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஓரம்கட்ட இபிஎஸ் வியூகம் அமைத்து வருவது நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி வித்தியாசமான தொகுதியாகும். ஏனென்றால், இங்கு பல்வேறு சமூக மக்கள், சரிசமமாக இருப்பதே இதற்கு காரணம். எந்த இனமக்கள் அதிகம் என்று கூற முடியாத வகையில், முதலியார், சோழியவேளாளர், தெலுங்கு, கன்னட செட்டியார்கள், தாழ்த்தப்பட்டோர் என அனைத்து தரப்பினரும் படர்ந்து காணப்படுகின்றனர்.முழுக்க முழுக்க மாநகராட்சி பகுதிக்குள் வரும் இத்தொகுதியில், தொடர்ந்து 3 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தற்போது அதிமுக தனது செல்வாக்கை இழந்து வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 60,215  ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் வெற்றி வித்தியாசம் 30,453 ஆக குறைந்துவிட்டது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சேலம் தெற்கு தொகுதியில், 15 ஆயிரம் ஓட்டுக்கள் திமுக வேட்பாளர் கூடுதலாக பெற்றார். இப்படியாக தெற்கு தொகுதி, அதிமுகவின் வெற்றித்தொகுதி என்ற பெயரை இழந்து வருகிறது.இருப்பினும் கட்சியினரால் அதிமுகவின் கோட்டை என கூறிவரும் நிலையில், வேட்பாளர் வாய்ப்பு யாருக்கு என்பதில் முட்டல், மோதல் ஆரம்பித்துள்ளது.

ஒருவர் மீது ஒருவர் இப்போதே புகார் பெட்டிசனை தட்டிவிடும் வேலையில் இறங்கியுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ சக்திவேல், இந்த முறை சீட் கேட்கப்போவதில்லை என நிர்வாகிகளிடமே கூறிவந்தாலும், அவருக்கு மீண்டும் ஆசை இருந்து வருகிறது. முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராஜ், நடேசன், மாஜி மேயர் சவுண்டப்பன் என்று மூத்த நிர்வாகிகளும் சீட் கேட்போரின் பட்டியலில் இருந்து வருகிறார்கள். மேலும் பகுதி செயலாளர்கள் சண்முகம், பாண்டியன், ஜெகதீஸ்குமார், ஜெ.பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் சரவணமணி, ஜெ.பேரவை பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், ஜினோத்குமார்,  மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் பங்க்.வெங்கடாசலம் ஆகியோரும் சீட் கேட்கும் குஸ்தியில் உள்ளனர்.

1997ம் ஆண்டு முதல் பகுதி செயலாளராக இருந்து வரும் சண்முகம், இந்த முறை தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். ஆனால் இவர்களில் முதல்வரின் மனம் கவர்ந்தவர் யார்? என பார்த்தால் மிகவும் குறைவானவர்களே காணப்படுகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி - இபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தபோது சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஓபிஎஸ் அணிக்கு தாவினர். பின்னர் இருஅணிகளும் ஒன்றாக சேர்ந்தது. ஆனால் அப்போது ஓபிஎஸ் பக்கம் போனவர்கள் யார்?இபிஎஸ்க்கு எதிராக என்னென்ன பேசினார்கள்? என்ற விவரத்தை ஒரு கோஷ்டியினர் சேகரித்து, இபிஎஸ்க்கு பெட்டிசனாக தட்டிவிட்டு வருகின்றனர்.

இதனால் அவர்களுக்குள்ளேயே புகைச்சல் ஏற்பட்டு வருகிறது. சேலம் தெற்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணியினரை ஓரங்கட்ட இபிஎஸ் அதிரடி வியூகம் வகுத்துள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே பேசி வருகின்றனர். அதனால்,அந்த நேரத்தில் ஓபிஎஸ் அணிக்கு சென்றவர்கள் தவிர புதிய நபருக்கு தான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அதிமுகவினர் கூறி வருகின்றனர். இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே சேலம் தெற்கு தொகுதி களேபரமாகியிருக்கிறது.

இந்த களபேரத்திற்கு இடையே கூட்டணி கட்சிகளான பாஜ, தேமுதிகவும், இத்தொகுதியை தட்டிப்பறிக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளது. இதனால் இந்த தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கி, ஒபிஎஸ் ஆதரவாளர்களை ஓரம் கட்டலாமா? அல்லது தனது தீவிர ஆதரவாளர்களில் ஒருவரை களமிறக்கலாமா? என்ற யோசனையில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் பரவலாக பேசப்படுகிறது. எனவே இந்த தொகுதியில் அதிமுக நிற்பதும், கூட்டணிக்கு  ஒதுக்குவதும் முழுக்க, முழுக்க முதல்வரின் கையில்தான் இருக்கிறது என்பதே உண்மை என்கின்றனர் அரசியல்  நோக்கர்கள்.

Related Stories: