மாவட்ட செயலாளர் ஆதிராஜாராமை நீக்கக்கோரி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 500 பேர் திடீர் முற்றுகை போராட்டம்: சென்னை ராயப்பேட்டையில் பரபரப்பு

சென்னை: அதிமுக சார்பில் கடந்த வாரம் முதல்வர், துணை முதல்வர், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், தேர்தலில் அதிமுகவினர் ஒற்றுமையுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். ஆனாலும், பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் உள்கட்சி மோதலை அரங்கேற்றி வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் அதிமுக கட்சியின் 2ம் மற்றும் 3ம்கட்ட நிர்வாகிகள், தொண்டர்களின் கோரிக்கையை கண்டுகொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றால் கட்சியினரிடம் கூட பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோன்று, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்களை நீக்கி விட்டு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பதவி வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த சனிக்கிழமை திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், அமைச்சர் பாண்டியராஜன் பணம் வாங்கிக் கொண்டு கட்சியில் பதவி வழங்குவதால் அவர்களை நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நடந்து 6 நாளில் மீண்டும் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு பகுதி செயலாளர்கள் எம்.கே.சிவா, பி.எஸ்.வாசன், செல்வக்குமார் தலைமையில் சுமார் 500 அதிமுக தொண்டர்கள் நேற்று காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் குறித்து அதிமுக இலக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ் கூறும்போது, “தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஆதிராஜாராம் உள்ளார். இவர், மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களை கட்சியில் இருந்து ஓரம் கட்டி வருகிறார். கடந்த 2020 அக்டோபர் மாதம்தான் இவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அன்று முதல் சர்வாதிகாரப்போக்குடன் செயல்பட்டு வருகிறார். மாவட்ட மாணவர் அணி செயலாளராக 18 வயதே நிரம்பிய ஒருவரை புதிதாக நியமித்துள்ளார். அதேபோன்று திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம் பகுதியில் கட்சிக்காக உண்மையாக உழைத்த பல நிர்வாகிகளை நீக்கிவிட்டு, புதிதாக கட்சிக்குள் வந்தவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு பதவி வழங்கி வருகிறார். இதனரல் கடந்த 14 ஆண்டு காலம் அதிமுக கட்சிக்காக பணியாற்றியவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். பணம் இருப்பவர்கள்தான் இனி அதிமுகவில் பதவி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது. இதை கண்டித்தும், மாவட்ட செயலாளர் ஆதிராஜாராமை பதவியில் இருந்து நீக்க கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து கட்சி தலைமை அலுவலகத்தில் புகார் மனுவும் அளித்துள்ளோம்” என்று கூறினார். அதிமுகவினர் கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: