நெல்லை சந்திப்பில் 2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்-வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு

நெல்லை :  நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் ரூ.16.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இப்பாலப்பணி முழுமையாக முடிந்தும் இதற்கான இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெறாததால் கடந்த சில மாதங்களாக பாலம் திறக்கப்படாமல் உள்ளது. பாலத்தின் ஒரு பகுதியான தேவர் சிலை அருகில் சாலை விரிவாக்கம் பணிக்காக அப்பகுதியில் காணப்பட்ட கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட 32 கட்டிடங்கள் மற்றும் ஒரு காம்பவுண்டு சுவர், வேளாண் அலுவலக கட்டிடம் ஆகியவற்றை அகற்ற கடந்த 12ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து நேற்று 2வது நாளாக பாளை தாசில்தார் பகவதிபெருமாள், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் முன்னிலையில் அப்பகுதியில் பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களுடன் முகாமிட்டு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி தொடங்கியது. அப்போது அங்குள்ள செல்போன் கடைக்கான கட்டிடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 20க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். பின்னர் அந்த செல்போன் கடை உள்பட அனைத்து கடைகளை இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பு பணி நிறைவு பெற்ற பின்னர் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: