டிரான்ஸ்போர்ட் உரிமையாளரிடம் கத்திமுனையில் 3 லட்சம் பறிப்பு: கடத்தல் கும்பலுக்கு வலை

திருவொற்றியூர்: மீஞ்சூர் அருகே விச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (43). அதே பகுதியில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் மணலி, சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து பெட்ரோலிய மூலப்பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகள் மூலம் எடுத்து சென்று, அனைத்து மாநிலங்களுக்கும் சப்ளை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் கொடுங்கையூரை சேர்ந்த இம்ரான் (45), இப்ராகிம் (42) ஆகிய இருவரும் பாலமுருகனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘லோடு ஏற்றிச் செல்ல லாரி வேண்டும். அது சம்பந்தமாக பேச, மாதவரத்துக்கு வாங்க,’ என  அழைத்துள்ளனர். அதன்படி, பாலமுருகனும் மாதவரத்துக்கு சென்றுள்ளார். மாதவரம் ரவுண்டானா அருகே சம்பந்தப்பட்ட இருவருடன் பாலமுருகன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பாலமுருகனின் கழுத்தில் கத்தியை வைத்து, ‘எங்களுக்கு 3 லட்சம் வேண்டும். அதை கொடுத்தால் விட்டுவிடுகிறோம். இல்லையேல் உன்னை இங்கிருந்து கடத்தி சென்றுவிடுவோம்,’ என்று இருவரும் மிரட்டியுள்ளனர்.

இதில் பயந்துபோன பாலமுருகன், தனது நண்பர்களுக்கு போன் செய்து 3 லட்சத்தை வரவழைத்து, இருவரிடமும் கொடுத்துவிட்டு தப்பி வந்துள்ளார். பின்னர் இதுகுறித்து மணலி புதுநகர் போலீசில் நேற்று முன்தினம் பாலமுருகன் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையில், சில ஆண்டுகளுக்கு முன், இம்ரான் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அதன்பின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, லாரி உரிமையாளர்களை கடத்தி, அவர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

இதுதொடர்பாக மணலி புதுநகர், மாதவரம் பால்பண்ணை ஆகிய காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இம்ரான், இப்ராகிம் உள்ளிட்ட கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து, தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: