நூல் விலை தொடர்ந்து உயர்வால் விசைத்தறி கூடங்களுக்கு வாரத்தில் 3 நாள் விடுமுறை: உரிமையாளர்கள் முடிவு; தொழிலாளர்கள் அதிர்ச்சி

பள்ளிபாளையம்: தீபாவளி பண்டிகைக்கு பிறகு  பருத்தி, ரயான் மற்றும் பாலியஸ்டர் உள்ளிட்ட நூல்களின் விலை கடுமையாக  உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகை வரை கிலோ 150ஆக இருந்த ரயான் நூல், 80 உயர்ந்து தற்போது கிலோ 230 ஆக உள்ளது. பருத்தி நூல் கிலோவிற்கு 100 உயர்ந்துள்ளது. நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் அதே நேரம்,  உற்பத்தி செய்யப்பட்ட துணியின் விலையை உயர்த்தி விற்க முடியாமல், ஜவுளி  உற்பத்தியாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். நூல் விலை உயர்வை மத்திய, மாநில  அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.   இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள், தேக்கத்தை தவிர்க்க உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, பள்ளிபாளையம் பக்கமுள்ள  வெடியரசம்பாளையத்தில், தற்போது சிங்கில் ஷிப்ட் முறை  அமல்படுத்தப்பட்டுள்ளது. சிங்கில் ஷிப்டில் ஒரு தொழிலாளிக்கு ஒருநாள் விட்டு  ஒருநாள் வேலை கொடுக்கின்றனர். வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள்  விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 4 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக, வாரத்தில் 6 நாட்கள் வேலை  செய்யும் ஒரு தொழிலாளிக்கு சுமார் 4 ஆயிரம் கூலியாக கிடைக்கும். தற்போது இந்த விடுமுறை அறிவிப்பு, தொழிலாளர்களுக்கு வருமான இழப்பை  ஏற்படுத்தியுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நூல்விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லுங்கி விலை மேலும் உயர்வு

பள்ளிபாளையம் நகர பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களில், காட்டன் மற்றும் பாலியஸ்டர் லுங்கிகள் உற்பத்தி  செய்யப்பட்டு வருகிறது. நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட லுங்கி  உற்பத்தியாளர்கள், கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் ஒரு மீட்டர்  லுங்கிக்கு 3 உயர்த்துவது என முடிவு செய்து அமல் படுத்தினர். ஆனால், தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதால்,  மீட்டருக்கு ஒரு ரூபாய் நஷ்ட நிலையில் உள்ளது. இதனால் இந்த வாரத்தில் இருந்து  மீட்டருக்கு மேலும் ₹2 உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: