முருகன் கோயிலில் சமஸ்கிருதத்திற்கு பதில் கந்தசஷ்டி கவசம் பாட வைக்க முடியுமா?: ஆ.ராசா எம்பி கேள்வி

சென்னை: முருகன் கோயிலில் சமஸ்கிருதத்திற்கு பதில் கந்தசஷ்டி கவசம் பாட வைத்தால், அலகு குத்தி, விபூதி பூசி வீதியில் அலையத்தயார் என்று ஆ.ராசா எம்பி கூறியுள்ளார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர்  தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில்  ஆவடியில் நடைபெற்றது. இதில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி கலந்து கொண்டு பேசியதாவது:

 வீரவணக்க நாள் கொண்டாட திமுகவை தவிர எம்.ஜி.ஆருக்கோ, ஜெயலலிதாவிற்கோ, எடப்பாடிக்கோ அருகதை இல்லை. இதற்கு காரணம், இந்தி ஒழிப்பு போராட்டத்தின் போது அரசாணையின் நகலை கொளுத்தியதற்காக கலைஞரை கைது செய்து எம்.ஜி.ஆர் சிறையில் அடைத்தார். வீரவணக்க நாள் கொண்டாட எம்.ஜி.ஆருக்கு கூட அருகதையில்லை. அவர் உருவாக்கிய அதிமுகவிற்கும் இல்லை.  தலைவர் ஸ்டாலின் வேல் ஏன் எடுத்தார் என கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமி, பாஜ முருகனுக்கு கூறிக்கொள்வது,  கடவுளை நம்பாத ராசாவாகிய நான்  வேல் எடுத்து அலகு குத்தி, விபூதி பூசி வீதியில் அலைய தயார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சமஸ்கிருதத்தை விட்டு, கந்த சஸ்டி கவசம் சொல்லி தமிழில் வழிபாடு நடத்த வைக்க முடியுமா. புயல் நிவாரணமாக கேட்கப்பட்டுள்ள 14 ஆயிரம் கோடியில், மீதமுள்ள 11 கோடியை தமிழகத்திற்காக 3 மாதங்களில்  வாங்கினால் காலம் முழுக்க எடப்பாடிக்கு அடிமையாக இருப்பேன். இல்லையென்றால் எடப்பாடி அறிவாலய வாயிலில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். எடப்பாடி நான் யாருக்கும் அடிமை இல்லை என்று கூறுகிறார். எடப்பாடி என்றோ டெல்லிக்கு அடிமையாகி விட்டார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெ நினைவிடத்தை பராமரிக்க மாட்டார்கள் என்ற பயத்தில் அடுத்த 5 ஆண்டுக்கும் பராமரிப்பு நிதியாக பல கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் அடையாளத்தையும், திராவிடத்தையும் பேணி காத்த பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூவரும் இன்று தலைவர் மு.க.ஸ்டாலின் வடிவிலே உள்ளனர். அவர் முதல்வராக பதவியேற்க உறுதி ஏற்கும் நாள் தான் இந்த வீரவணக்க நாள் என்றும், இது தான் தமிழுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.   இவ்வாறு ஆ.ராசா பேசினார்

Related Stories: